/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தீவிர சிகிச்சையில் மயங்க் அகர்வால்
/
தீவிர சிகிச்சையில் மயங்க் அகர்வால்
ADDED : ஜன 30, 2024 10:53 PM

அகர்தலா: விமானத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மயங்க் அகர்வால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் 33. துவக்க வீரரான இவர் 21 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணி கேப்டனாக உள்ளார். கடந்த 4 போட்டியில் இரு சதம் விளாசினார். அகர்தலாவில் நடந்த திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் இவரது தலைமையிலான அணி 29 ரன்னில் வென்றது.
அங்கிருந்து சூரத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக (ரயில்வேஸ், பிப். 2-5) கிளம்பினார். விமானத்தில் இருந்த பாட்டிலில் தண்ணீர் என நினைத்து ஏதோ குடித்துள்ளார். உடனடியாக பலமுறை வாந்தி எடுத்துள்ளார். பின் வயிற்று வலியால் அவதிப்பட்ட இவரது வாய், தொண்டையில் கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவசர மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மீண்டும் அகர்தலா திரும்பியது. விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அகர்வால், அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மற்ற வீரர்கள் கிளம்பிச் சென்றனர். தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டார். அகர்வால் மனைவி ஆஷிதா கூறுகையில்,'' தற்போது டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார்,'' என்றார்.