/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை அணி சாம்பியன்: பைனலில் வீழ்ந்தது டில்லி
/
மும்பை அணி சாம்பியன்: பைனலில் வீழ்ந்தது டில்லி
ADDED : மார் 15, 2025 11:34 PM

மும்பை: பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணி கோப்பை வென்றது. பைனலில் 8 ரன் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது.
மும்பையில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் பைனலில் டில்லி, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
மும்பை அணிக்கு ஹேலி (3), யாஸ்திகா (8) ஏமாற்றினர். ஜெஸ் ஜோனாசென் வீசிய 11வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 33 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த போது நாட் சிவர் (30) அவுட்டானார். ஹர்மன்பிரீத், 44 பந்தில் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. அமன்ஜோத் கவுர் (14), சான்ஸ்கிரிதி (8) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு கேப்டன் மெக் லானிங் (13), ஷபாலி வர்மா (4), ஜெஸ் ஜோனாசென் (13) நிலைக்கவில்லை. அன்னாபெல் (2) ஏமாற்றினார். ஜெமிமா (30) ஓரளவு கைகொடுத்தார். சாரா பிரைஸ் (5) 'ரன்-அவுட்' ஆனார். அபாரமாக ஆடிய மரிஜான் காப் (40) நம்பிக்கை தந்தார். ஷிகா (0), மின்னு மணி (4) சொதப்பினர்.
கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்டன. நாட் சிவர் வீசிய 20வது ஓவரில் 5 ரன் மட்டும் கிடைத்தது. டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்து தோல்வியடைந்தது. மும்பை சார்பில் நாட் சிவர் 3 விக்கெட் சாய்த்தார். மும்பை அணி 2வது முறையாக (2023, 2025) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டில்லி அணி தொடர்ந்து 3வது முறையாக பைனலில் தோல்வியடைந்தது.