/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஹேசல்வுட் காயத்தில் மர்மம்: கவாஸ்கர் சந்தேகம்
/
ஹேசல்வுட் காயத்தில் மர்மம்: கவாஸ்கர் சந்தேகம்
ADDED : டிச 02, 2024 11:13 PM

அடிலெய்டு: ''ஆஸ்திரேலிய அணியில் பதட்டத்தை காண முடிகிறது. ஹேசல்வுட் காயத்தின் பின்னணி மர்மமாக உள்ளது,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் 'பேட்டிங்' எடுபடவில்லை. மூன்றாவது நாள் முடிவில், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 12 ரன் எடுத்து தவித்தது. அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 'வேகப்புயல்' ஹேசல்வுட் பங்கேற்றார். அவரிடம்,'நான்காவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது,' என கேட்கப்பட்டது. அதற்கு,'இந்த கேள்வியை பேட்டர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் அடுத்த போட்டிக்கு காத்திருக்கிறேன்,' என்றார்.
சக பேட்டர்களை விட்டுக் கொடுத்து ஹேசல்வுட் பேசியது சர்ச்சையை கிளப்பியது. பேட்டர்கள், பவுலர்கள் என இரு பிரிவாக ஆஸ்திரேலிய அணி செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. பின் ஹேசல்வுட்டிற்கு காயம் (இடது உடல் பக்க பிடிப்பு) ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவருக்கு பதில் அடிலெய்டில் துவங்கும் இரண்டாவது டெஸ்டில் ( டிச. 6-10, பகலிரவு) ஸ்காட் போலண்ட் இடம் பெற உள்ளார்.
பேட்டிக்கு நீக்கமா: ஆஸ்திரேலிய அணிக்கு ஹேசல்வுட் காயம் பின்னடைவாக பார்க்கப்பட்டது. சமீபத்திய பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். கடந்த முறை (2020) அடிலெய்டு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 5 ஓவரில் 8 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்தியா 36 ரன்னுக்கு ஆல் அவுட்டாக நேர்ந்தது. இப்படி வேகத்தில் மிரட்டும் இவர், உண்மையில் காயம் அடையவில்லையாம். சர்ச்சை பேட்டிக்காக, அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார் என சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
நலமாக இருந்தார்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''பெர்த் டெஸ்ட் தோல்வி, ஆஸ்திரேலிய அணியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடாத வீரர்களை நீக்க வேண்டுமேன முன்னாள் வீரர்கள் சிலர் கூறுகின்றனர். பேட்டர்களுக்கு தான் அதிக பொறுப்பு என ஹேசல்வுட் குறிப்பிட்டார். இது ஆஸ்திரேலிய அணியில் விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சிக்கின்றனர். பேட்டி கொடுத்த போது ஹேசல்வுட் நலமாக இருந்தார். திடீரென காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் இடம் பெற மாட்டார் என்கின்றனர். தொடரில் இருந்து முழுமையாக விலகவும் வாய்ப்பு உண்டு. இவரது காயத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. கடந்த காலத்தில் இது போன்ற காயங்கள் இந்திய கிரிக்கெட்டில் மாயம் செய்தது உண்டு. தற்போது ஆஸ்திரேலிய அணியிலும் அரங்கேறியுள்ளது,''என்றார்.
ஹெட் மறுப்பு
ஆஸ்திரேலிய பேட்டர் டிராவிஸ் ஹெட் கூறுகையில்,''அணியில் விரிசல் எதுவும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். 'டிரஸ்சிங் ரூமில்' பேட்டர், பவுலர் என அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். பேட்டர்கள் ரன் குவிப்பது அவசியம். எங்களது பவுலர்களின் திறமை பற்றி தெரியும். கடந்த காலத்தில் சிறப்பாக பந்துவீசி அணியை மீட்டுள்ளனர்,''என்றார்.