/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து: பெங்களூரு டெஸ்டில்
/
இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து: பெங்களூரு டெஸ்டில்
இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து: பெங்களூரு டெஸ்டில்
இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து: பெங்களூரு டெஸ்டில்
ADDED : அக் 20, 2024 11:10 PM

பெங்களூரு: பெங்களூரு டெஸ்டில் இந்திய பந்துவீச்சு எடுபடவில்லை. மழையும் பெய்யாததால், எதிர்பார்த்த திருப்பம் ஏற்படவில்லை. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் 'விழுந்த' இந்தியா 46 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து 402 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் சர்பராஸ் (150), ரிஷாப் (99) தயவில் 'எழுந்த' இந்திய அணி, 462 ரன் குவித்தது. நியூசிலாந்துக்கு 107 ரன் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை, மழை காரணமாக நான்காவது நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி 0/0 என்ற நிலையில் இருந்தது.
பும்ரா ஆறுதல்: ஐந்தாவது நாள் ஆட்த்தில் மைதானம் ஈரமாக இருந்ததால், ஒரு மணி நேரம் தாமதமாக காலை 10.15 மணிக்கு ஆட்டம் துவங்கியது. பும்ரா வீசிய முதல் ஓவரில் கேப்டன் டாம் லதாம் (0) அவுட்டானார். சிறிது நேரத்தில் பும்ராவின் பந்தில் கான்வே (17) வெளியேற, நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து திணறியது.
பின் ரச்சின் ரவிந்திரா, வில் யங் சேர்ந்து விளாச, இந்திய பந்துவீச்சு சரிவை சந்தித்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தனர். குல்தீப் பந்தை யங் சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து குல்தீப் ஓவரில் ரச்சின் 2 பவுண்டரி அடித்தார். ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய யங், வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி 27.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்து வென்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. யங் (48), ரச்சின் (39) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்ட் வரும் அக். 24ல் புனேயில் துவங்குகிறது.ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் ரச்சின் வென்றார்.
எங்கே அஷ்வின்...
நேற்று பும்ரா, சிராஜ் 'வேகத்திற்கு' பின் அனுபவ 'ஸ்பின்னர்' அஷ்வினுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். நான்காவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசுவார். ரச்சின் போன்ற இடது கை பேட்டரை வீழ்த்தும் திறன் பெற்றவர். ஆனால், ஜடேஜா, குல்தீப்பிற்கு முன்னதாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்களது 'சுழலில்' பவுண்டரிகள் பறந்த போதும், அஷ்வினை அழைக்க தயங்கினார் கேப்டன் ரோகித். ஒருவழியாக 5வது பவுலராக, 25வது ஓவரில் வந்தார் அஷ்வின். அப்போது நியூசிலாந்து வெற்றிக்கு 9 ரன் தான் தேவைப்பட்டது. அஷ்வினுக்கு 2 ஓவர் மட்டுமே வழங்கி அதிர்ச்சி அளித்தார் ரோகித். 2 ஓவரில் அஷ்வின் 6 ரன் விட்டுக் கொடுத்தார். குல்தீப் 3 ஓவரில் 26 ரன், ஜடேஜா 7.4 ஓவரில் 28 ரன்னை வாரி வழங்கினர். அஷ்வினுக்கும் ரோகித்துக்கும் இடையே என்ன பிரச்னை என 'நெட்டிசன்கள்' கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மூன்றாவது முறை
பெங்களூருவில் அசத்திய நியூசிலாந்து அணி, 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் வெற்றி பெற்றது. இதற்கு முன் 1988ல் ஜான் ரைட் தலைமையில் மும்பை வான்கடே மைதானத்தில் வென்றது. 1969ல் நாக்பூர் டெஸ்டில் வென்றது. ஒட்டுமொத்தமாக இந்திய மண்ணில் 37 டெஸ்டில் விளையாடிய நியூசிலாந்து, 3வது வெற்றியை பதிவு செய்தது. 17ல் தோல்வி, 17ல் 'டிரா' செய்தது.
வானிலை சாதகம்
பெங்களூரு டெஸ்டில் நியூசிலாந்து அணிக்கு வானிலை கைகொடுத்தது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா தவறாக 'பேட்டிங்' தேர்வு செய்தார். முதல் நாள் மழை பெய்த நிலையில், ஆடுகளம் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, இந்தியா 46 ரன்னில் சுருண்டது. பின் நியூசிலாந்து களமிறங்கிய போது வெயில் அடிக்க, எளிதாக ரன் சேர்த்தது. ரச்சின் சதம் விளாச, 402 ரன் குவித்தது. நேற்று மழை பெய்யும் என கணிக்கப்பட்டது. ஆனால் மழை தலை காட்டாததால், எளிதாக வென்றது.
'சேஸ்' எப்படி
இந்திய மண்ணில் 100 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை 24 ஆண்டுகளுக்கு பின் ஒரு அணி (நியூசி.,) 'சேஸ்' செய்து வென்றுள்ளது. இதற்கு முன் 2000ல் தென் ஆப்ரிக்க அணி, மும்பையில் 164 ரன்னை சேஸ் செய்தது. இடைப்பட்ட காலத்தில் (2001-24) சொந்த மண்ணில் 100க்கும் மேற்பட்ட இலக்கு கொண்ட 32 போட்டிகளில் 23ல் இந்தியா வென்றது. 9 போட்டி 'டிரா' ஆனது.
எடுபடாத 'சுழல்'
பெங்களூரு டெஸ்டில் இந்திய ஸ்பின்னர்கள் அதிக ரன்னை விட்டுக் கொடுத்தனர். இவர்களது எகானமி ரேட் 4.83 ஆக இருந்தது. இதற்கு முன் சொந்த மண்ணில் விசாகப்பட்டனம் டெஸ்டில் 4.53 ரன் (எதிர் இங்கிலாந்து, 2024) விட்டுக் கொடுத்ததே அதிகம். அன்னிய மண்ணில் செஞ்சுரியன் டெஸ்டில் (2010, தென் ஆப்ரிக்கா) அதிகபட்ச ரன்னை (5.60 எகானமி ரேட்) வழங்கினர்.
2005க்கு பின்...
பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டெஸ்டில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக 2005ல் இங்கு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் தோற்றது. அதன்பின் இங்கு விளையாடிய 8 டெஸ்டில், 5 வெற்றி, 3 'டிரா'வை பதிவு செய்தது.
ஒட்டுமொத்தமாக இங்கு 25 டெஸ்டில், 9 வெற்றி, 9 'டிரா', 7 தோல்வியை பெற்றது இந்தியா.
துணிச்சல் தொடரும்: கேப்டன் ரோகித்
மழையால் பாதிக்கப்பட்ட கான்பூர் டெஸ்டில் (எதிர், வங்கதேசம்) அதிரடியாக பேட் செய்த இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சிலும் அதிவேகமாக ரன் சேர்த்தது. இம்முறை வெற்றி கிடைக்கவில்லை.
இது பற்றி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''ஒரு போட்டியின் முடிவை வைத்து எங்களது அணுகுமுறை மாறாது. துணிச்சலான பேட்டிங் தொடரும். இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றோம். பின் தொடர்ந்து நான்கு வெற்றிகளை பெற்றோம். இது போல தோல்வியில் இருந்து வலிமையாக மீண்டு வருவோம்.
பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 46 ரன்னுக்கு சுருண்டு விடுவோம் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த மூன்று மணி நேர ஆட்ட அடிப்படையில் இந்திய வீரர்களை மதிப்பீடு செய்வது சரியல்ல. இரண்டாவது இன்னிங்சில் தரமாக பேட் செய்தோம். இப்போட்டியில் சிறிய தவறுகள் செய்ததால், பெரிய விளைவை சந்தித்தோம். இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்.
முழங்கால் பகுதியில் 'ஆப்பரேஷன்' செய்துள்ள ரிஷாப் பன்ட், ஓடி ரன் எடுக்க சிரமப்பட்டார். இவர் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது,''என்றார்.
வருகிறார் வாஷிங்டன் சுந்தர்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு (அக். 24-28, புனே), மூன்றாவது (நவ. 1-5, மும்பை) டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்திய ரஞ்சி கோப்பை போட்டியில் டில்லி அணிக்கு எதிராக 152 ரன் விளாசினார். சுழற்பந்துவீச்சிலும் கைகொடுப்பார்.
தொடர்ந்து முதலிடம்
பெங்களூரு டெஸ்டில் தோல்வியடைந்த போதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) புள்ளிப்பட்டியலில் இந்திய அணி (68.06%) முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி (44.44%), 6வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது.