sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

வருண் 'மேஜிக்'... இந்தியா வெற்றி: 'சுழலில்' சிக்கியது நியூசிலாந்து

/

வருண் 'மேஜிக்'... இந்தியா வெற்றி: 'சுழலில்' சிக்கியது நியூசிலாந்து

வருண் 'மேஜிக்'... இந்தியா வெற்றி: 'சுழலில்' சிக்கியது நியூசிலாந்து

வருண் 'மேஜிக்'... இந்தியா வெற்றி: 'சுழலில்' சிக்கியது நியூசிலாந்து

3


UPDATED : மார் 02, 2025 10:41 PM

ADDED : மார் 02, 2025 09:46 PM

Google News

UPDATED : மார் 02, 2025 10:41 PM ADDED : மார் 02, 2025 09:46 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி, நியூசிலாந்தை 44 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 'சுழலில்' அசத்திய வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் ஆட்டம் வீணானது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதின. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியதால், 'ரிலாக்சாக' களமிறங்கின.

4 'ஸ்பின்னர்'கள்: இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட, வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு பெற்றார். மொத்தம் 4 'ஸ்பின்னர்கள்' இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

ஸ்ரேயாஸ் அரைசதம்: இந்திய அணி துவக்கத்தில் திணறியது. மாட் ஹென்றி 'வேகத்தில்' சுப்மன் கில் (2) எல்.பி.டபிள்யு., ஆனார். ஜேமிசன் பந்தில் கேப்டன் ரோகித் சர்மா (15) அவுட்டானார். கோலியும் (11) விரைவில் வெளியேற, இந்தியா 7 ஓவரில் 30/3 ரன் எடுத்து தவித்தது. பின் ஸ்ரேயாஸ், அக்சர் படேல் சேர்ந்து விவேகமாக ஆடினர். நான்காவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த நிலையில், ரச்சின் ரவிந்திரா வலையில் அக்சர் (42) சிக்கினார். ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் 2 சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ், 79 ரன்னுக்கு ரூர்கே பந்தில் அவுட்டானார். சான்ட்னர் 'சுழலில்' ராகுல் (23) அவுட்டாக, இந்தியா 39.1 ஓவரில் 182/6 ரன் தான் எடுத்தது.

பாண்ட்யா விளாசல்: கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ரன் சேர்த்தார். ஜடேஜா, 16 ரன் எடுத்தார். ஜேமிசன் ஓவரில் (49வது) பாண்ட்யா வரிசையாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். ஹென்றி பந்தில் பாண்ட்யா (45), அவுட்டானார். இதே ஓவரில் ஷமியை (5) வெளியேற்றிய ஹென்றி, தனது 5வது விக்கெட்டை பெற்றார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது.

'சுழல்' புயல்: சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு பாண்ட்யா 'செக்' வைத்தார். இவரது பந்தை துாக்கி அடித்த ரச்சின் ரவிந்திரா (6), அக்சர் படேலின் அசத்தல் 'கேட்ச்சில்' அவுட்டானார். பின் இந்தியாவின் நான்கு 'ஸ்பின்னர்' பார்முலா வெற்றிக்கு கைகொடுத்தது. வருண் 'சுழலில்' வில் யங் (22) போல்டானார். டேரில் மிட்சல் 17 ரன்னுக்கு வெளியேற, 26 ஓவரில் 104/3 ரன் எடுத்தது.

வருண் 5 விக்கெட்: வில்லியம்சன், லதாம் சிறிது நேரம் போராடினர். ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அனுபவ வில்லியம்சன், 77 பந்தில் ஒருநாள் அரங்கில் 47வது அரைசதம் எட்டினார். ஜடேஜா பந்தில் லதாம் (14) அவுட்டானார். வருண் வலையில் கிளன் பிலிப்ஸ் (12), பிரேஸ்வெல் (2) நடையை கட்டினர். அக்சர் படேல் பந்தில் வில்லியம்சன் (81) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஹென்றியை (2) வெளியேற்றிய வருண், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நியூசிலாந்து அணி 45.3 ஓவரில் 205 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

ஆஸி.,யுடன் மோதல்: லீக் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்தியா, 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்தது. நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.

13வது முறை

நேற்றும் இந்திய அணிக்கு 'டாஸ்' கைகூடவில்லை. ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 13வது முறையாக 'டாஸ்' வெல்ல தவறியது. ரோகித் தலைமையில் மட்டும் 10 முறை (2023 நவ.- 2025, மார்ச்) 'டாஸ்' வெல்லவில்லை. அதிக முறை 'டாஸ்' வெல்ல தவறிய கேப்டன் பட்டியலில் ரோகித் (10) மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடங்களில் வெஸ்ட் இண்டீசின் லாரா (12, 1998 அக்.-1999 மே), நெதர்லாந்தின் பீட்டர் போரன் (11, 2011 மார்ச்-2013 ஆக.) உள்ளனர்.

'சூப்பர்மேன்' பிலிப்ஸ்

தனது 300வது ஒருநாள் போட்டியில் நேற்று களமிறங்கிய கோலி, மாட் ஹென்றி வீசிய பந்தை (6.4வது ஓவர்) அடித்தார். இதை 'பேக்வார்ட் பாய்ன்ட்' திசையில் நின்ற கிளன் பிலிப்ஸ் அந்தரத்தில் பறந்து, வலது கையை நீட்டி அற்புதமாக பிடிக்க, அதிர்ச்சியில் வெளியேறினார் கோலி (11). இந்த 'கேட்ச்சை' 0.62 வினாடி நேரத்தில் கணித்து கச்சிதமாக பிடித்தார் பிலிப்ஸ். ஜான்டி ரோட்ஸ் போன்ற இவரது 'சூப்பர்மேன்' சாகசத்தை பார்த்து, துபாய் அரங்கில் இருந்த கோலி மனைவி அனுஷ்கா, ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

* பின் ஹென்றி வீசிய பவுன்சரை (45.5வது ஓவர்) ஜடேஜா (16) அடிக்க, அனுபவ வில்லியம்சன் பறந்து 'கேட்ச்' பிடித்து அசத்தினார்.

* இத்தொடரில் நியூசிலாந்து அணி 96.0 சதவீத 'கேட்ச்' பிடித்து முதலிடத்தில் உள்ளது. ஒரு கேட்ச் மட்டுமே நழுவவிட்டது.

மந்தமான அரைசதம்

ஒருநாள் அரங்கில் நேற்று தனது மந்தமான அரைசதத்தை எட்டினார் ஸ்ரேயாஸ் (75 பந்தில்). இதற்கு முன் 74 பந்தில் (எதிர், வெ,இ., 2022, ஆமதாபாத்) அரைசதம் அடித்திருந்தார்.

ஷமியை தாக்கிய பந்து

ஹென்றி பந்தை (49.5வது ஓவர்) அடித்த ஷமி 2வது ரன்னுக்கு ஓடினார். அப்போது நியூசிலாந்து பீல்டர் எறிந்த பந்து ஷமியின் முதுகில் பலமாக தாக்கியது. சிறிது நேரம் 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார். பின் சகஜ நிலைக்கு திரும்பினார் ஷமி.

ஹென்றி 5 விக்.,

நேற்று 5 விக்கெட் வீழ்த்திய மாட் ஹென்றி (5/42), சாம்பியன்ஸ் டிராபியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது நியூசிலாந்து வீரரானார். முதலிடத்தில் ஜேக்கப் ஓரம் (5/36, எதிர், அமெரிக்கா, 2004) உள்ளார்.

கோலி '300'

நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய விராத் கோலி, ஒருநாள் அரங்கில் 300வது போட்டியில் விளையாடிய 7வது இந்திய வீரரானார். இதுவரை 300 போட்டியில், 51 சதம் உட்பட 14,096 ரன் குவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (463 போட்டி), தோனி (350), டிராவிட் (344), முகமது அசார் (334), கங்குலி (311), யுவராஜ் சிங் (304) இம்மைல்கல்லை எட்டினர்.

* சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 300 ஒருநாள், 100 டெஸ்ட், 100 'டி-20' போட்டிகளில் விளையாடிய முதல் வீரரானார் கோலி. இதுவரை இவர், 300 ஒருநாள், 123 டெஸ்ட், 125 சர்வதேச 'டி-20'ல் பங்கேற்றுள்ளார்.

முதல் வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 2 முறை மோதின. இதில் நியூசிலாந்து (2000, நைரோபி), இந்தியா (2025, துபாய்) தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

5 விக்கெட்

சுழலில் அசத்திய வருண் சக்ரவர்த்தி (5 விக்கெட், 42 ரன், 10 ஓவர்) சாம்பியன்ஸ் டிராபியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 36 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், லண்டன், 2013) உள்ளார்.

* சாம்பியன்ஸ் டிராபியில் அறிமுகமான முதல் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2வது பவுலரானார் வருண். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (6/52, எதிர்: நியூசிலாந்து, 2017) உள்ளார்.

* இது, ஒருநாள் போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன், கட்டாக்கில் (2025, பிப். 9) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தி, 54 ரன் விட்டுக்கொடுத்திருந்தார்.






      Dinamalar
      Follow us