/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தான் கேப்டன் பதவி: பாபர் ஆசம் விலகல்
/
பாகிஸ்தான் கேப்டன் பதவி: பாபர் ஆசம் விலகல்
ADDED : அக் 02, 2024 08:20 PM

கராச்சி: பாகிஸ்தான் ஒருநாள், 'டி-20' அணி கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலகினார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் பாகிஸ்தான் அணி சோபிக்காததால், கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலகினார். ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு ஷாகீன் அப்ரிதி, டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். பின், கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்காக பாபர் ஆசம் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு திரும்பியது.
இந்நிலையில் பாபர் ஆசம், ஒருநாள், 'டி-20' அணிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து கடந்த மாதம், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததாக கூறினார். இதனையடுத்து புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் மூன்று வித போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன் அறிவிக்கப்படலாம்.
பாபர் ஆசம் சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ''கேப்டன் பதவி எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். பதவி விலக இதுதான் சரியான தருணம். இதுகுறித்து கடந்த மாதம் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டேன். இனி எனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தலாம்,'' என்றார்.