/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
போப் சதம்: இங்கிலாந்து அபாரம்
/
போப் சதம்: இங்கிலாந்து அபாரம்
ADDED : செப் 06, 2024 11:06 PM

ஓவல்: இலங்கைக்கு எதிரான ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் போப் சதம் விளாசினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் 3வது டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு டான் லாரன்ஸ் (5) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய பென் டக்கெட், 48 பந்தில் அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 76/1 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை, மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் உணவு இடைவேளை முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.
இரண்டாவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது மிலன் ரத்னாயகே பந்தில் டக்கெட் (86) அவுட்டானார். அபாரமாக ஆடிய கேப்டன் போப், டெஸ்ட் அரங்கில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. போப் (103), புரூக் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கையின் லகிரு குமாரா 2 விக்கெட் வீழ்த்தினார்.