/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஓய்வு பெற்றார் புஜாரா: கிரிக்கெட் அரங்கில் இருந்து
/
ஓய்வு பெற்றார் புஜாரா: கிரிக்கெட் அரங்கில் இருந்து
ஓய்வு பெற்றார் புஜாரா: கிரிக்கெட் அரங்கில் இருந்து
ஓய்வு பெற்றார் புஜாரா: கிரிக்கெட் அரங்கில் இருந்து
ADDED : ஆக 24, 2025 10:59 PM

புதுடில்லி: அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து புஜாரா ஓய்வு பெற்றார்.
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா 37. குஜராத்தின் ராஜ்கோட்டில் பிறந்த இவர், 2010ல் பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். 2013ல் புலவாயோவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக பங்கேற்றார். கடைசியாக, 2023ல் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடினார்.
இதுவரை 103 டெஸ்ட் (7195 ரன், 19 சதம்), 5 ஒருநாள் போட்டிகளில் (51 ரன்) விளையாடிய புஜாரா, அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது 13 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
புஜாரா கூறுகையில், ''இந்திய அணியின் ஜெர்சி அணிந்து, தேசிய கீதம் பாடி, ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும் போது முழுத்திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இந்த உணர்வை, வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனைத்து நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது உண்மை. அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என்னுடை கிரிக்கெட் வாழ்க்கையில் பயணித்த சகவீரர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
தொடர் நாயகன்
* ராஞ்சி டெஸ்டில் (2017, எதிர்: ஆஸி.,) 525 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா, 202 ரன் குவித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் இன்னிங்சில், 500 அல்லது அதற்கு மேல் பந்துகளை எதிர்கொண்ட முதல் இந்திய வீரரானார் புஜாரா.
* ஒரு டெஸ்டின் 5 நாட்களும் 'பேட்' செய்த 3வது இந்தியர், 13வது சர்வதேச வீரரானார் புஜாரா (எதிர்: இலங்கை, 2017, கோல்கட்டா).
* கடந்த 2018-19ல் ஆஸ்திரேலியாவில் நடந்த 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தார் புஜாரா. நான்கு டெஸ்டில், 3 சதம் உட்பட 521 ரன் குவித்த இவர், தொடர் நாயகன் விருது வென்றார்.
* முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதம் (18) விளாசிய இந்திய வீரர் புஜாரா. சர்வதேச அளவில் இம்மைல்கல்லை எட்டிய 4வது வீரர். முதலிடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் (37) உள்ளார்.
பி.சி.சி.ஐ., புகழாரம்
புஜாராவின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்ட செய்தியில், 'டெஸ்ட் அரங்கில் புஜாராவின் பங்களிப்பு மகத்தானது. இவரது கிரிக்கெட் வாழ்க்கை, விடாமுயற்சி, தன்னலமற்ற தன்மைக்கு சிறந்த உதாரணம். எதிரணியினரின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து இந்திய பேட்டிங் வரிசையின் தடுப்புச்சுவறாக விளங்கினார்,' என, தெரிவித்திருந்தது.
முன்னாள் வீரர்கள் பாராட்டு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு, சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சச்சின்: புஜாராவின் திறமை, பொறுமை, போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளித்தது போன்றவை இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு துாணாக அமைந்தது. 2018ல் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில் உங்களிப் பங்களிப்பு முக்கியமானது. உங்களது இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
கும்ளே: டெஸ்ட் போட்டியின் துாதுவராக இருந்தீர்கள். உங்களது சாதனைகளால் இந்தியர் அனைவரும் பெருமை கொள்கிறோம். அணியின் வெற்றிக்காக அனைத்தையும் கொடுத்தீர்கள். வாழ்த்துகள் புஜாரா.
ரவி சாஸ்திரி, லட்சுமண், சேவக், காம்பிர், யுவராஜ் சிங், ரகானே, இர்பான், ரெய்னா உள்ளிட்டோரும் புஜாராவை வாழ்த்தினர்.
அடுத்த இன்னிங்ஸ்
புஜாரா, இனி வர்ணனையாளராக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 'ஆண்டர்சன்-சச்சின்' டிராபி டெஸ்ட் தொடரின் போது இவர், கவாஸ்கர் உள்ளிட்டோருடன் இணைந்து வர்ணனை செய்தார்.