sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்தியாவுக்கு இமாலய வெற்றி: ஜடேஜா, ஜெய்ஸ்வால் அசத்தல்

/

இந்தியாவுக்கு இமாலய வெற்றி: ஜடேஜா, ஜெய்ஸ்வால் அசத்தல்

இந்தியாவுக்கு இமாலய வெற்றி: ஜடேஜா, ஜெய்ஸ்வால் அசத்தல்

இந்தியாவுக்கு இமாலய வெற்றி: ஜடேஜா, ஜெய்ஸ்வால் அசத்தல்


UPDATED : பிப் 18, 2024 11:08 PM

ADDED : பிப் 18, 2024 05:14 PM

Google News

UPDATED : பிப் 18, 2024 11:08 PM ADDED : பிப் 18, 2024 05:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டில் ஜடேஜா(5 விக்கெட்), ஜெய்ஸ்வால்(214 ரன்) கூட்டணி கைகொடுக்க, இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்ட் குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 445, இங்கிலாந்து 319 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்து, 322 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சுப்மன் கில்(65), குல்தீப்(3) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுப்மன் 91 ரன்



நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு சுப்மன், 'நைட்- வாட்ச்மேன்' குல்தீப் நம்பிக்கை தந்தனர். ஹார்ட்லி பந்தை அடித்த குல்தீப் ஒரு ரன் எடுக்க முற்பட்டார். மறுமுனையில் இருந்து சுப்மன் ஓடி வந்தார். திடீரென குல்தீப் தயங்க, பந்தை 'பீல்டிங்' செய்த ஸ்டோக்ஸ் 'த்ரோ' செய்ய, சுப்மன்(91) ரன் அவுட்டானார். சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோன விரக்தியில் பேட்டை, தரையில் ஓங்கி அடித்தவாறு வெளியேறினார். முகுதுபிடிப்பில் இருந்து மீண்ட ஜெய்ஸ்வால் களமிறங்கினார். சதம் அடித்திருந்த இவர், ரன் வேட்டையை தொடர்ந்தார். குல்தீப், 27 ரன் எடுத்தார்.

'ஹாட்ரிக்' சிக்சர்

பின் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். ஆண்டர்சன் ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசினார் ஜெய்ஸ்வால். சர்பராஸ் கான் அரைசதம் கடந்தார். ரூட் பந்தில் ஒரு ரன் எடுத்த ஜெய்ஸ்வால், இரட்டை சதம் எட்டினார். ரேஹன் ஓவரில் சர்பராஸ் கான் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, இங்கிலாந்தை பதம் பார்த்தது போதும் என கேப்டன் ரோகித் 'சிக்னல்' கொடுத்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை 4 விக்கெட்டுக்கு 430 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. ஜெய்ஸ்வால்(214 ரன், 236 பந்து, 14 பவுண்டரி, 12 சிக்சர்), சர்பராஸ் கான்(68 ரன், 72 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து வெற்றிக்கு 557 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஜடேஜா 'சுழல்' புயல்



கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே சறுக்கியது. இவர்களது அதிரடியாக ரன் சேர்க்கும் 'பாஸ் பால்' ஆட்டம் எடுபடவில்லை. டக்கெட்(4) ரன் அவுட்டானார். பும்ரா பந்தில் கிராலே(11) காலியானார். பின் 'சுழல்' ஜாலம் காட்டிய உள்ளூர் ஹீரோ ரவிந்திர ஜடேஜா, இங்கிலாந்தின் 'மிடில் ஆர்டரை' தகர்த்தார். இவரது வலையில் போப்(3), பேர்ஸ்டோவ்(4), ரூட்(7) சிக்கினர். குல்தீப் பந்தில் ஸ்டோக்ஸ்(15) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். போக்ஸ்(16) அவுட்டான போது, இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 82 ரன் எடுத்து தத்தளித்தது. கடைசி கட்டத்தில் மார்க் உட் அதிரடியாக ஆடி, 100 ரன் கடக்க உதவினார். துணிச்சலாக களம் கண்ட அஷ்வின் பந்தில் ஹார்ட்லி(16) வீழ்ந்தார். மீண்டும் பந்துவீச வந்த ஜடேஜாவிடம் மார்க் உட்(33) சரண்டர் ஆனார். இது, இவரது 5வது விக்கெட்டாக அமைந்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் ஜடேஜா வென்றார். நான்காவது டெஸ்ட் வரும் 23ல் ராஞ்சியில் துவங்க உள்ளது.

இமாலய வெற்றி

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் அதிக ரன் (434) வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் நியூசிலாந்தை 372 ரன் (2021, மும்பை) வித்தியாசத்தில் வென்றிருந்தது.



557 ரன் இலக்கு



இங்கிலாந்தின் வெற்றிக்கு 557 ரன் நிர்ணயிக்கப்பட்டது. இது, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி நிர்ணயித்த 2வது அதிகபட்ச இலக்கு. முன்னதாக வெலிங்டன் டெஸ்டில் (2009, எதிர்: நியூசி.,) 616 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

இரண்டாவது மோசமான தோல்வி



இந்தியாவிடம் 434 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து, டெஸ்ட் அரங்கில் தனது 2வது மோசமான தோல்வியை பெற்றது. ஓவல் டெஸ்டில் (1934, எதிர்: ஆஸி.,) 562 ரன்னில் வீழ்ந்தது இங்கிலாந்தின் மோசமான தோல்வி.

33 வெற்றி



டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவை (32 வெற்றி) முந்தி முதலிடம் பிடித்தது இந்தியா. இவ்விரு அணிகள் 134 டெஸ்டில் மோதின. இதில் இந்தியா 33, இங்கிலாந்து 51ல் வென்றது. 50 டெஸ்ட் 'டிரா' ஆனது.

24 வெற்றி



இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 24வது டெஸ்ட் வெற்றி (67 போட்டி, 28 'டிரா', 15 தோல்வி) பெற்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அதிக டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 டெஸ்டில் வெற்றி (54 போட்டி, ஒரு 'டை', 16 'டிரா', 14 தோல்வி) பெற்றிருந்தது.

48 'சிக்சர்'



இத்தொடரில் இந்தியா சார்பில் இதுவரை 48 சிக்சர் பதிவாகின. இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர் அடித்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா. இதற்கு முன் 2019ல் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்கா சார்பில் 47 சிக்சர் பதிவானது.

28 சிக்சர்



ராஜ்கோட் டெஸ்டில் இந்தியா சார்பில் 28 சிக்சர் பதிவாகின. இதன்மூலம் ஒரு டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த அணிகளுக்கான பட்டியலில் இந்திய அணி தனது சொந்த சாதனையை முறியடித்தது. இதற்கு முன் 2019ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான விசாகப்பட்டனம் டெஸ்டில் இந்திய அணி 27 சிக்சர் அடித்திருந்தது.

மூன்றாவது முறை



ராஜ்கோட் டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய இந்தியா 445, 430/4 ('டிக்ளேர்') ரன் குவித்தது. இந்திய அணி மூன்றாவது முறையாக ஒரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 400 ரன்னுக்கு மேல் விளாசியது. இதற்கு முன் பாகிஸ்தான் (407, 407/9, கோல்கட்டா, 2005), இலங்கை (426, 412/4, ஆமதாபாத், 2009) அணிகளுக்கு எதிராக இப்படி ரன் சேர்த்தது.

ஏழாவது முறை



முதல் இன்னிங்சில் சதம் (112) விளாசிய ரவிந்திர ஜடேஜா, 2வது இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். இந்திய வீரர் ஒருவர், ஒரே டெஸ்டில் சதம், 5 விக்கெட் என 'ஆல்-ரவுண்டராக' அசத்தியது 7வது முறையாக அரங்கேறியது. ஏற்கனவே மொகாலி டெஸ்டில் (எதிர்: இலங்கை, 2022) ஜடேஜா இப்படி சாதித்திருந்தார். அஷ்வின் மூன்று முறை (2011, 2016ல் வெஸ்ட் இண்டீஸ், 2021ல் இங்கிலாந்து) இப்படி சாதித்தார்.

9 முறை



சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை அனில் கும்ளேவுடன் பகிர்ந்து கொண்டார் ஜடேஜா. இருவரும் தலா 9 முறை இவ்விருதை கைப்பற்றினர். அடுத்த இடத்தில் கோலி, சச்சின் (தலா 8) உள்ளனர்.

5 விக்கெட்



ராஜ்கோட் டெஸ்டில் 'சுழலில்' அசத்திய இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 2வது இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். இவர் 13வது முறையாக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார். இந்தியா சார்பில் கும்ளே (35), அஷ்வின் (34) அதிக முறை இப்படி சாதித்தனர்.

அசத்தல் அறிமுகம்



ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகமான சர்பராஸ் கான் (62, 68*) பேட்டிங்கில் நம்பிக்கை தந்தார். இதன்மூலம் அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த 4வது இந்தியரானார். ஏற்கனவே திலாவர் ஹுசேன் (எதிர்: இங்கிலாந்து, 1934), சுனில் கவாஸ்கர் (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 1971), ஸ்ரேயாஸ் ஐயர் (எதிர்: நியூசிலாந்து, 2021) அறிமுக டெஸ்டில் அசத்தினர்.

12 சிக்சர்



இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் 12 சிக்சர் விளாசினார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பாகிஸ்தானின் வாசிம் அக்ரமுடன் (12 சிக்சர், எதிர்: ஜிம்பாப்வே, 1996) பகிர்ந்து கொண்டார். இதற்கு முன் இந்தியா சார்பில் சித்து 8 சிக்சர் (எதிர்: இலங்கை, 1994, லக்னோ) அடித்திருந்தார்.

முதல் வீரர்



இந்தியாவின் ஜெய்ஸ்வால் இதுவரை மூன்று சதம் (171, 209, 214*) அடித்துள்ளார். இதன்மூலம் தனது முதல் மூன்று சதத்தை தலா 150 ரன்னுக்கு மேல் எடுத்த முதல் இந்தியர், 7வது சர்வதேச வீரரானார் ஜெய்ஸ்வால்.

இளம் வீரர்



டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை இரட்டை சதம் விளாசிய இளம் வீரர்கள் வரிசையில் 3வது இடம் பிடித்தார் ஜெய்ஸ்வால் (22 ஆண்டு, 49 நாள்). முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் காம்ப்ளி (21 ஆண்டு, 54 நாள்), ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (21 ஆண்டு, 318 நாள்) உள்ளனர்.

கோலி வழியில்



விசாகப்பட்டனத்தில் 209 ரன் குவித்த ஜெய்ஸ்வால், ராஜ்கோட்டில் 214 ரன் விளாசினார். இதன்மூலம் வினோத் காம்ப்ளி (1993, எதிர்: இங்கிலாந்து, ஜிம்பாப்வே), விராத் கோலிக்கு (2017, எதிர்: இலங்கை) பின் தொடர்ச்சியாக 2 இரட்டை சதம் விளாசிய 3வது இந்தியரானார் ஜெய்ஸ்வால். தவிர சர்வதேச அரங்கில் இப்படி சாதித்த 11வது வீரரானார்.

சிக்சர் மன்னன்



இத்தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 22 சிக்சர் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன் 2019ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ரோகித் சர்மா 19 சிக்சர் அடித்திருந்தார்.

தோனியுடன்...



டெஸ்ட் அரங்கில் அதிவேக இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் 6வது இடத்தை தோனியுடன் பகிர்ந்து கொண்டார் ஜெய்ஸ்வால். இருவரும் தலா 231 பந்தில் இம்மைல்கல்லை எட்டினர். முதல் 5 இடங்களில் சேவக் உள்ளார்.

கங்குலியை முந்தினார்



இத்தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 545 ரன் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய இடது கை பேட்டர்கள் வரிசையில் கங்குலியை (534 ரன், எதிர்: பாக்., 2007) முந்தி முதலிடம் பிடித்தார்.






      Dinamalar
      Follow us