ADDED : மார் 01, 2024 10:21 PM

மும்பை: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் இன்று தமிழகம், மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் முதல் தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. இன்று மும்பையில் துவங்கும் 2வது அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியை சந்திக்கிறது.
வாஷிங்டன் வருகை
தமிழக அணி லீக் சுற்றில் விளையாடிய 7 போட்டியில் 4 வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என 28 புள்ளிகளுடன் 'சி' பிரிவில் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த காலிறுதியில் சவுராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் நாராயணன் ஜெகதீசன் (812 ரன்), பாபா இந்திரஜித் (686), பிரதோஷ் ரஞ்சன் பால் (449) நம்பிக்கை அளிக்கின்றனர். 'சுழலில்' கேப்டன் சாய் கிஷோர் (47 விக்கெட்), அஜித் ராம் (41) பலம் சேர்க்கின்றனர். வேகத்தில் சந்தீப் வாரியர் (23) ஆறுதல் தருகிறார். 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் வருகையால் தமிழக அணியின் வெற்றிக்கு உதவலாம்.
ஸ்ரேயாஸ் நம்பிக்கை
மும்பை அணி லீக் சுற்றில் பங்கேற்ற 7 போட்டியில் 5 வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி என 37 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த பரோடாவுக்கு எதிரான காலிறுதியில் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பேட்டிங்கில் பூபன் லால்வானி (518) ஆறுதல் தருகிறார்.
பிரித்வி ஷா, கேப்டன் அஜின்கியா ரகானே எழுச்சி பெற வேண்டும். காலிறுதியில் இரட்டை சதம் விளாசிய முஷீர் கான், சதம் கடந்த தனுஷ், துஷார் தேஷ்பாண்டே கைகொடுத்தால் சொந்த மண்ணில் சுலப வெற்றி பெறலாம். ஸ்ரேயாஸ் வருகையால் மும்பை அணியின் பேட்டிங் வரிசை வலுவடைந்துள்ளது. பவுலிங்கில் மோகித் அவஸ்தி (32 விக்கெட்), ஷாம்ஸ் முலானி (27) விக்கெட் வேட்டை நடத்த வேண்டும்.

