ADDED : அக் 20, 2024 09:25 PM

புதுடில்லி: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் அசத்த, டில்லி அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், டில்லி அணிகள் விளையாடுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 674/6 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் டில்லி அணி முதல் இன்னிங்சில் 43/0 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் டில்லி அணிக்கு சனத் சங்வான் (36), ஹர்ஷ் தியாகி (35) நல்ல துவக்கம் கொடுத்தனர். கேப்டன் ஹிம்மத் சிங் (0), ஜான்டி சித்து (4), மயங்க் ரவாத் (0) ஏமாற்றினர். பிரனவ் ராஜ்வன்ஷி (40), நவ்தீப் சைனி (26) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய யாஷ் துல் சதம் கடந்தார்.
ஆட்டநேர முடிவில் டில்லி அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்து, 410 ரன் பின்தங்கி இருந்தது. யாஷ் துல் (103) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் குர்ஜப்னீத் சிங், முகமது, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ருதுராஜ் சதம்
மும்பையில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் மகாராஷ்டிரா 126, மும்பை 441 ரன் எடுத்தன. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (145), அன்கித் பாவ்னே (101), சச்சின் தாஸ் (98) கைகொடுக்க மகாராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 388 ரன் எடுத்தது. பின், 74 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் 13/0 ரன் எடுத்திருந்தது. பிரித்வி ஷா (7), ஆயுஷ் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.