/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை: தமிழகம் தடுமாற்றம்
/
ரஞ்சி கோப்பை: தமிழகம் தடுமாற்றம்
ADDED : அக் 16, 2025 09:53 PM

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணியின் 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்றினர்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. கோவையில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி, முதல் இன்னிங்சில் 307/6 ரன் எடுத்திருந்தது. இஷான் (125), சாஹில் (64) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இஷான் கிஷான் 173 ரன்னில் (6x6, 15x4) ஆட்டமிழந்தார். சாஹில் (77) ஓரளவு கைகொடுத்தார். ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 419 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. விகாஷ் சிங் (2) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் குர்ஜப்னீத் சிங் 4, சந்திரசேகர், ஹேம்சுதேஷன் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு பாலசுப்ரமணியம் சச்சின் (0) ஏமாற்றினார். ஜதின் குமார் பாண்டே 'வேகத்தில்' கேப்டன் நாராயணன் ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்சன் பால் (9), ஆன்ட்ரி சித்தார்த் (2) வெளியேறினர். சாஹில் பந்தில் பாபா இந்திரஜித் 'டக்-அவுட்' ஆனார்.
தமிழக அணி முதல் இன்னிங்சில் 18/5 ரன் எடுத்திருந்த போது மழையால் 2ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ஷாருக்கான் (4), அம்ப்ரிஷ் (0) அவுட்டாகமல் இருந்தனர். ஜார்க்கண்ட் சார்பில் ஜதின் 3, சாஹில் 2 விக்கெட் கைப்பற்றினர்.