ADDED : பிப் 28, 2025 10:04 PM

நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 342 ரன் எடுத்தது. விதர்பா அணி 37 ரன் முன்னிலை பெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக்கிறது. இதில் விதர்பா, கேரளா அணிகள் விளையாடுகின்றன. விதர்பா அணி முதல் இன்னிங்சில் 379 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 131/3 ரன் எடுத்திருந்தது. ஆதித்யா (66), சச்சின் பேபி (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் நான்காவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது ஆதித்யா சர்வதே (79) அவுட்டானார். சல்மான் நிசார் (21), முகமது அசார் (34), ஜலஜ் சக்சேனா (28) நிலைக்கவில்லை. கேப்டன் சச்சின் பேபி (98) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஈடன் ஆப்பிள் டாம் (10), நிதிஷ் (1) ஏமாற்றினர்.
கேரளா அணி முதல் இன்னிங்சில் 342 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. விதர்பா சார்பில் தர்ஷன், ஹர்ஷ் துபே, பார்த் தலா 3 விக்கெட் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் 37 ரன் முன்னிலை பெற்ற விதர்பா அணி, இப்போட்டியை 'டிரா' செய்தால் கோப்பை வெல்லலாம்.