/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி: கோப்பை வென்றது விதர்பா
/
ரஞ்சி: கோப்பை வென்றது விதர்பா
UPDATED : மார் 02, 2025 09:04 PM
ADDED : மார் 02, 2025 08:32 PM

நாக்பூர்: கேரளாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அடிப்படையில் விதர்பா அணி சாம்பியன் ஆனது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனலில் விதர்பா, கேரளா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா 379, கேரளா 342 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 249/4 ரன் எடுத்திருந்தது. கருண் (132), அக்சய் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் (135) நம்பிக்கை தந்தார். ஹர்ஷ் துபே (4) ஏமாற்றினார். கேப்டன் அக்சய் வாட்கர் (25), அக்சய் கர்னேவர் (30) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய தர்ஷன் நல்கண்டே அரைசதம் கடந்தார். விதர்பா அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 375 ரன் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். தர்ஷன் (51), யாஷ் தாக்கூர் (8) அவுட்டாகாமல் இருந்தனர். கேரளா சார்பில் ஆதித்யா சர்வதே 4 விக்கெட் கைப்பற்றினார்.
மூன்றாவது முறை: இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் 37 ரன் முன்னிலை பெற்ற விதர்பா அணி 3வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றது. இதற்கு முன் 2017-18, 2018-19 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆட்ட நாயகன் விருதை விதர்பா அணியின் டேனிஷ் மலேவர் வென்றார். தொடர் நாயகன் விருதை விதர்பா சுழற்பந்துவீச்சாளர் ஹர்ஷ் துபே (69 விக்கெட்) கைப்பற்றினார்.
அக்சய் வகாரே ஓய்வு
விதர்பா அணியின் சீனியர் சுழற்பந்துவீச்சாளர் அக்சய் வகாரே 39. இதுவரை 105 முதல் தரம் (344 விக்கெட்), 60 'லிஸ்ட் ஏ' (63 விக்கெட்), 62 'டி-20' (53 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். ரஞ்சி கோப்பை பைனலில் விளையாடிய இவர், போட்டி முடிந்த பின் முதல் தர போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். நேற்று இவருக்கு, விதர்பா கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.