/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சோகத்தில் ரோகித் சர்மா: நீக்கப்பட்ட பின்னணி என்ன
/
சோகத்தில் ரோகித் சர்மா: நீக்கப்பட்ட பின்னணி என்ன
ADDED : ஜன 03, 2025 11:39 PM

சிட்னி: சிட்னியில் நேற்று இந்திய அணியின் 'டிரஸ்சிங் ரூமிற்கு' வெளியே விரக்தியுடன் அமர்ந்திருந்த ரோகித் சர்மாவை பார்க்கவே பாவமாக இருந்தது. கடந்த ஆண்டு 'டி-20' உலக கோப்பையை கம்பீரமாக கையில் ஏந்திய இவருக்கு, இந்த ஆண்டு துவக்கமே சரியில்லை. மோசமான 'பார்ம்' காரணமாக, அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடர் ரோகித் சர்மாவுக்கு 37, சோதனையாக அமைந்தது. 5 இன்னிங்சில் 31 ரன் (சராசரி 6.20) தான் எடுத்தார்.
காம்பிர் முடிவு: கேப்டன்சியும் எடுபடாத நிலையில், பயிற்சியாளர் காம்பிரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தார். சிட்னி டெஸ்டில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில், பயிற்சியின் போது ரோகித் தடுமாறுவதை பார்த்தார். இவரை நீக்க முடிவு செய்தார். 'சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின் ரோகித் ஓய்வு பெறட்டும். அதுவரை அவகாசம் கொடுக்கலாம்' என பி.சி.சி.ஐ., உயர்மட்ட நிர்வாகி ஒருவர் விடுத்த கோரிக்கையை நிராகரித்தார். தேர்வுக்குழு தலைவர் அகார்கருடன் விவாதித்தார். இறுதியில் ரோகித்தை நீக்கினார். சிட்னி போட்டிக்கான இந்திய அணியின் 16 பேர் அடங்கிய பட்டியலில் ரோகித் பெயர் இடம் பெறவில்லை. 'ரிசர்வ்' வீரராக கூட சேர்க்கப்படவில்லை. சிட்னி டெஸ்ட் முடிந்த பின் கோலியுடன் பேச உள்ளனர். இவருக்கும் 'ஓய்வு' கொடுக்கப்படலாம்.
ரோகித் சர்மா இனி டெஸ்டில் விளையாட வாய்ப்பு இல்லை. விரைவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு (50 ஓவர்) கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிப்பது பற்றி பரிசீலித்து வருகின்றனர்.
ரோகித் விலகல் பற்றி இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் கூறியது:
பும்ரா: எங்களது கேப்டன் தலைமைப்பண்பை வெளிப்படுத்தியுள்ளார். தானாகவே போட்டியில் இருந்து 'ரெஸ்ட்' அறிவித்துள்ளார் ரோகித். இது அணியில் நிலவும் ஒற்றுமையை உணர்த்துகிறது. அனைவரும் அணியின் நலனுக்காக செயல்படுகிறோம்.
கவாஸ்கர்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பெற தவறினால், கடந்த மெல்போர்ன் போட்டி தான் ரோகித்தின் கடைசி டெஸ்ட். அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தேர்வாளர்கள் முடிவு எடுக்கின்றனர்.
ரவி சாஸ்திரி: ரோகித் சர்மாவுக்கு வயதாகிறது. இந்திய அணிக்காக விளையாட இளம் வீரர்கள் காத்திருக்கின்றனர். புதிதாக அணியை கட்டமைக்க வேண்டியுள்ளது. ரோகித் தொடர்பான முடிவு கடினமானது.
சித்து: கேப்டனை அணியில் இருந்து நீக்குவது சரியல்ல. இது, மோசமான முன்னுதாரணம். ரோகித்தை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
மார்க் டெய்லர் (ஆஸி.,): ஒரு தொடரின் கடைசி டெஸ்டில் இருந்து எந்த ஒரு நாட்டின் கேப்டனும் விலக மாட்டார். ரோகித் சர்மா நீக்கப்பட்டார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை ஏன் வெளிப்படையாக சொல்ல தயங்குகின்றனர்.