ADDED : பிப் 26, 2024 10:31 PM

கான்பூர்: சி.கே.நாயுடு போட்டியில் முச்சதம் அடித்து அசத்தினார் சமீர் ரிஸ்வி.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சி.கே.நாயுடு டிராபி (23 வயதுக்குட்பட்ட) தொடர் நடக்கிறது. உ.பி.,யின் கான்பூரில் நடக்கும் காலிறுதியில் (4 நாள்) சவுராஷ்டிரா, உ.பி., அணிகள் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய உ.பி., அணிக்கு சுவஸ்திக் (57) கைகொடுக்க, ரிதுராஜ் சர்மா 132 ரன் எடுத்தார்.
ஆராத்யா 45 ரன்னுக்கு அவுட்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சமீர் ரிஸ்வி, 165 பந்தில் இரட்டை சதம் கடந்திருந்தார். நேற்று இரண்டாவது நாளிலும் அசத்திய இவர், 261 வது பந்தில் முச்சதம் ('டிரிபிள்') எட்டினார். இவர் 266 பந்தில் 312 ரன் (12 சிக்சர், 33 பவுண்டரி) எடுத்த போது, ஆதித்யா பந்தில் அவுட்டானார்.
சித்தார்த் 84 ரன் எடுத்தார். உ.பி., அணி முதல் இன்னிங்சில் 746 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 32/2 ரன் எடுத்து, 714 ரன் பின் தங்கி இருந்தது.
சென்னை அணி வீரர்
உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக ரன் விளாசுபவர் சமீர் ரிஸ்வி. இவரை ரெய்னாவுடன் ஒப்பிடுவர். முதல் தர போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் 'டி-20' போட்டிகளில் (11ல் 295 ரன்) சராசரி 49 ரன்னாக உள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல்., ஏலத்தில் சமீரை, சென்னை அணி ரூ. 8.4 கோடிக்கு வாங்கியுள்ளது.

