ADDED : ஆக 03, 2024 11:37 PM

பெங்களூரு: காயத்தில் இருந்து மீண்ட இந்தியாவின் ஷமி, உள்ளூர் போட்டியில் விளையாட உள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 33. இதுவரை 64 டெஸ்ட் (229 விக்கெட்), 101 ஒருநாள் (195), 23 சர்வதேச 'டி-20' (24) போட்டியில் பங்கேற்றுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு (நவ. 19) ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் விளையாடினார். கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த பிப்ரவரி மாதம் 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,) காயத்தில் இருந்து மீள மறுவாழ்வு பயிற்சி மேற்கொண்டு வரும் ஷமி, பவுலிங் வலைப்பயிற்சி மேற்கொண்டார்.
இந்திய அணிக்கு திரும்புவதற்காக, உள்ளூர் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ளார் ஷமி. இதுகுறித்து ஷமி கூறுகையில், ''மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவது எப்போது என்று தற்போது கூற முடியாது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். முதற்கட்டமாக உள்ளூர் போட்டியில் பெங்கால் சார்பில் விளையாட உள்ளேன். இதில் உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் இந்திய அணியில் இடம் பெறலாம்,'' என்றார்.
இந்திய அணி, வங்கதேசம் (செப். 19-23, செப். 27-அக். 1), நியூசிலாந்து (அக். 16-20, 24-28, நவ. 1-5) அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. உள்ளூர் போட்டியில் திறமையை நிரூபித்தால் இத்தொடர்களுக்கு ஷமி தேர்வாகலாம்.