/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஷமி கலக்கல்: காலிறுதியில் பெங்கால்
/
ஷமி கலக்கல்: காலிறுதியில் பெங்கால்
ADDED : டிச 09, 2024 11:05 PM

பெங்களூரு: முகமது ஷமி கைகொடுக்க, சையது முஷ்தாக் அலி டிராபி காலிறுதிக்கு பெங்கால் அணி முன்னேறியது.
பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி காலிறுதிக்கான 'பிளே-ஆப்' போட்டியில் பெங்கால், சண்டிகர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சண்டிகர் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
பெங்கால் அணிக்கு அபிஷேக் போரெல் (8), கேப்டன் சுதிப் குமார் (0), ஷாபாஸ் அகமது (7) ஏமாற்றினர். கரண் லால் (33), விரித்திக் சாட்டர்ஜி (28), பிரதிப்தா பிராமனிக் (30) ஓரளவு கைகொடுத்தனர். கடைசி நேரத்தில் அசத்திய முகமது ஷமி, 17 பந்தில், 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 32 ரன் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். பெங்கால் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய சண்டிகர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து, 3 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் 12 ரன் தேவைப்பட்டது. சயான் கோஷ், 2 விக்கெட் கைப்பற்றி 7 ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். 'வேகத்தில்' மிரட்டிய முகமது ஷமி, 4 ஓவரில், 25 ரன் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பெங்கால் சார்பில் சயான் கோஷ் 4, கனிஷ்க் சேத் 2 விக்கெட் சாய்த்தனர்.
காயத்தில் இருந்து மீண்ட ஷமி, இதுவரை 9 உள்ளூர் போட்டிகளில் (ரஞ்சி-1, சையது முஷ்தாக்-8 போட்டி) விளையாடி உள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் இவருக்கு உடற்தகுதி பரிசோதனை நடத்த உள்ளது. இதில் தேறும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' தொடரின் கடைசி 2 டெஸ்டில் விளையாடலாம்.