/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்க அணி அசத்தல்: வியான் முல்டர் சதம்
/
தென் ஆப்ரிக்க அணி அசத்தல்: வியான் முல்டர் சதம்
ADDED : அக் 30, 2024 06:48 PM

சாட்டோகிராம்: வியான் முல்டர் சதம் விளாச தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 575 ரன் குவித்தது.
வங்கதேசம் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 307/2 ரன் எடுத்திருந்தது. டோனி (141), பெடிங்ஹாம் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பொறுப்பாக ஆடிய டேவிட் பெடிங்ஹாம் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்த போது தைஜுல் பந்தில் பெடிங்ஹாம் (59) போல்டானார். மறுமுனையில் அசத்திய டோனி டி ஜோர்ஜி, 150 ரன்னை கடந்தார். இவர், 177 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின் இணைந்த வியான் முல்டர், சேனுரான் முத்துசாமி கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய முல்டர், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த முத்துசாமி, முதன்முறையாக அரைசதம் கடந்தார். இவர்களை பிரிக்க முடியாமல் வங்கதேச பவுலர்கள் தடுமாறினர்.
தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 575 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. முல்டர் (105), முத்துசாமி (68) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் தைஜுல் 5 விக்கெட் சாய்த்தார்.
ரபாடா அசத்தல்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு ரபாடா தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ஷாத்மன் (0), ஜாகிர் ஹசன் (2) வெளியேறினர். மஹ்முதுல் ஹசன் ஜாய் (10), ஹசன் மஹ்முத் (3) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 38/4 ரன் எடுத்திருந்தது. மோமினுல் (6), கேப்டன் நஜ்முல் ஷான்டோ (4) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட் கைப்பற்றினார்.