ADDED : செப் 02, 2026 10:00 PM

பெங்களூரு: துலீப் டிராபி பைனலுக்கு தெற்கு மண்டல அணி முன்னேறியது. அரையிறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வடக்கு மண்டல அணியை வென்றது.
பெங்களூருவில், துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதி நடந்தது. முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி (எதிர்: மத்திய மண்டலம்) வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில் தெற்கு, வடக்கு மண்டல அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 195, தெற்கு மண்டலம் 312 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 256/7 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் எட்டாவது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது நிதீஷ் பந்தில் அன்ஷுல் கம்போஜ் (36) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய நிதீஷ் 'வேகத்தில்' குர்னுார் பிரார் (7), அர்ஷ்தீப் சிங் (12) போல்டாகினர். வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 297 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நிஷாந்த் (35) அவுட்டாகாமல் இருந்தார். தெற்கு மண்டலம் சார்பில் நிதீஷ் 5 விக்கெட் கைப்பற்றினார்.
பின், 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தெற்கு மண்டல அணிக்கு ரிக்கி புய் (42), நாராயண் ஜெகதீசன் (43) நல்ல துவக்கம் தந்தனர். அடுத்து கேப்டன் திலக் வர்மா, ரவிச்சந்திரன் ஸ்மரன் ஜோடி கைகொடுத்தது. கம்ரான் இக்பால் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய திலக் வர்மா, அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.
தெற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 182/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திலக் (51), ஸ்மரன் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.
சென்னையில், வரும் செப். 6-10ல் நடக்கவுள்ள பைனலில் தெற்கு, கிழக்கு மண்டல அணிகள் மோதுகின்றன.
