ஸ்டார்க் 'ஆறு'...ஆஸி., ஜோரு: 64 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
ஸ்டார்க் 'ஆறு'...ஆஸி., ஜோரு: 64 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
ADDED : ஆக 22, 2026 10:52 PM

மக்காய்: இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், 6 விக்கெட் வீழ்த்த, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 64 ரன்னுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வென்றது. மக்காய் நகரில் 2வது டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஸ்டார்க் அசத்தல்: வங்கதேச அணிக்கு மிட்சல் ஸ்டார்க் தொல்லை தந்தார். இவரது பந்தில் ஷாத்மன் இஸ்லாம், தான்சித் ஹசன், 'டக்-அவுட்' ஆகினர். தொடர்ந்து மிரட்டிய ஸ்டார்க் 'வேகத்தில்' மோமினுல் ஹக் (9), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (0), லிட்டன் தாஸ் (0) வெளியேறினர். கம்மின்ஸ் பந்தில் முஷ்பிகுர் ரஹிம் (5), மெஹிதி ஹசன் மிராஸ் (11) அவுட்டாகினர்.
ஹசன் மஹ்மூத் (10), டாஸ்கின் அகமது (1), ஷோரிபுல் இஸ்லாம் (14) ஏமாற்றினர். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 64 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6, கம்மின்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.
கிரீன் அரைசதம்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ரென்ஷா (8), லபுசேன் (4) ஏமாற்றினர். டிராவிஸ் ஹெட் (22) சோபிக்கவில்லை. ஸ்டீவ் ஸ்மித் (42) ஓரளவு கைகொடுத்தார். ஷோரிபுல் இஸ்லாம் 'வேகத்தில்' வெப்ஸ்டர் (0), கம்மின்ஸ் (0), ஸ்டார்க் (1) வெளியேறினர். கேமிரான் கிரீன் அரைசதம் கடந்தார்.
ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 165/8 ரன் எடுத்து, 101 ரன் முன்னிலையில் இருந்தது. கிரீன் (51), லியான் (10) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் 6 விக்கெட் வீழ்த்தினார்.
முதல்வன்
டெஸ்ட் அரங்கில், அதிக முறை ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஸ்டார்க். இதுவரை 4 முறை இப்படி சாதித்தார். அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் பெட்ரோ கோலின்ஸ் (3 முறை) உள்ளார்.
22 பந்தில் 5 விக்கெட்
'வேகத்தில்' மிரட்டிய ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், தனது முதல் 22 பந்தில், 5 விக்கெட் கைப்பற்றினார்.
நான்காவது குறைந்தபட்சம்
வங்கதேச அணி, டெஸ்ட் அரங்கில் தனது 4வது குறைந்தபட்ச ஸ்கோரை (64/10) பெற்றது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் (43/10, நார்த் சவுண்டு, 2018), தென் ஆப்ரிக்கா (53/10, டர்பன், 2022), இலங்கை (62/10, கொழும்பு, 2007) அணிகளிடம் சுருண்டது.
