/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வலுக்கும் புயல்...தவிக்கும் இந்திய வீரர்கள்
/
வலுக்கும் புயல்...தவிக்கும் இந்திய வீரர்கள்
ADDED : ஜூலை 01, 2024 11:28 PM

பார்படாஸ்: பார்படாசில் புயல் மழையுடன் சூறாவளி காற்று வீசுவதால், இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பார்படாஸ் தீவில் நடந்த 'டி-20' உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. கோப்பை வென்ற இந்திய வீரர்கள் நேற்று காலை 11 மணிக்கு பார்படாஸ் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் புறப்பட இருந்தனர். பின் நியூயார்க்-துபாய் வழியாக டில்லி அல்லது மும்பைக்கு வர திட்டமிட்டிருந்தனர். பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற இருந்தனர். சொந்த ஊர் திரும்பி குடும்பத்தினர், ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாட காத்திருந்தனர்.
இந்தச் சூழலில், அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-4' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. 'உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பார்படாசின் கிரான்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. அலுவலகம், கடைகள் மூடப்பட்டு, ஊரடங்கு போல் நிலைமை உள்ளது. தண்ணீர், மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஓட்டலில் பரிதாபம்
இந்திய வீரர்களும் பார்படாசின் 'ஹில்டன் ஓட்டலில்' முடங்கியுள்ளனர். போதிய பணியாளர்கள் இல்லாததால், அறைகளுக்கு உணவு பரிமாற ஆளில்லை. இந்திய வீரர்கள் 'பேப்பர் பிளேட்டில்' வரிசையாக நின்று சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டலின் அருகே புயல் கரையை கடக்க இருப்பதால், வீரர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
@Image1@பயண திட்டம் என்னவீரர்களுடன் தங்கியுள்ள பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா அடுத்த கட்ட பயண திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறார். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் உள்ளனர். டில்லியில் இருந்து நேரடியாக பார்படாசிற்கு தனி விமானம் அனுப்புவது அல்லது அமெரிக்காவிடம் தனி விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து இந்தியாவுக்கு வீரர்களை அழைத்து வருவது என பல திட்டங்கள் பற்றி பரிசீலிக்கின்றனர்.
ஜெய் ஷா கூறுகையில்,''நாங்கள் அனைவரும் பார்படாஸ் புயலில் சிக்கி தவிக்கிறோம். புயல் கரையை கடந்த பின்னரே விமான நிலையம் திறக்கப்படும். இங்கு சகஜ நிலை திரும்பிய பிறகு, இந்திய அணியின் பயண திட்டம் முடிவு செய்யப்படும். அதற்கு பின் தான் வெற்றி கொண்டாட்ட ஏற்பாடுகள் பற்றி நினைக்க முடியும்,''என்றார்.