/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'மூன்றாவது' வரமாக வருவாரா சூர்யா... * லாரா எதிர்பார்ப்பு
/
'மூன்றாவது' வரமாக வருவாரா சூர்யா... * லாரா எதிர்பார்ப்பு
'மூன்றாவது' வரமாக வருவாரா சூர்யா... * லாரா எதிர்பார்ப்பு
'மூன்றாவது' வரமாக வருவாரா சூர்யா... * லாரா எதிர்பார்ப்பு
ADDED : மே 07, 2024 10:55 PM

புதுடில்லி: ''உலக கோப்பை தொடரில் சூர்யகுமார் மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும்,''என லாரா வலியுறுத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 2-29) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் துவக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா-ஜெய்ஸ்வால் மிரட்டலாம். மூன்றாவது இடத்தில் கோலி வருவார். நான்காவது வீரராக சூர்யகுமார் (செல்லமாக சூர்யா) களமிறக்கப்படலாம். இந்த பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து லாரா கூறியது:
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிறைய 'சூப்பர் ஸ்டார்'கள் உள்ளனர். இவர்களே அனைத்தையும் பார்த்துக் கொள்வர் என நினைக்கக் கூடாதது. ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை பயிற்சியாளர் டிராவிட் வகுக்க வேண்டும். கோலியின் 'ஸ்டிரைக் ரேட்' போதுமானதாக இல்லை என கூறுவது சரியல்ல. இவரை போன்ற 'சீனியர்' வீரர் விளையாடும் 'லெவனில்' கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
'டி-20' அரங்கின் சிறந்த வீரர் சூர்யகுமார். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடிக்கும் திறன் பெற்றவர். உலக கோப்பை தொடரில் இவரை மூன்றாவது வீரராக களமிறக்க வேண்டும். இதற்கு ஏற்ப 'பேட்டிங் ஆர்டரில்' மாற்றம் செய்வது அவசியம். இவர் 10-15 ஓவர் நிலைத்து நின்று விளையாடினால், இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டுவது நிச்சயம்.
இந்திய அணியில் நான்கு 'ஸ்பின்னர்'கள் உள்ளனர். இதில் சகால், குல்தீப்பிற்கு வாய்ப்பு அளிக்கலாம். இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம்.
பைனலில் இந்தியா
கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்திய அணி விரைவாக வெளியேறியது. இதனால் இத்தொடர் மீதான ஆர்வம் குறைந்தது. இது போன்று இம்முறை நடக்கக் கூடாது. 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்து விளையாடினால் உச்சம் தொடலாம். பைனலில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோத வேண்டும். இதில் சிறந்த அணி உலக கோப்பை வெல்லட்டும்.
இவ்வாறு லாரா கூறினார்.
ரோகித் சர்மாவுக்கு 'பிரேக்'
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,''ஐ.பி.எல்., தொடரில் ரோகித் சர்மா (மும்பை) தடுமாறுகிறார். மிகவும் சோர்வாக உள்ளார். இந்திய அணியின் கேப்டனான இவர், 'டி-20' உலக கோப்பை தொடருக்கு முன் சின்ன 'பிரேக்' எடுக்கலாம். இதன் மூலம் மீண்டும் புத்துணர்வுடன் களமிறங்கி சாதிக்கலாம்,''என்றார்.