/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்கா 'ஹாட்ரிக்' வெற்றி * 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது
/
தென் ஆப்ரிக்கா 'ஹாட்ரிக்' வெற்றி * 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது
தென் ஆப்ரிக்கா 'ஹாட்ரிக்' வெற்றி * 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது
தென் ஆப்ரிக்கா 'ஹாட்ரிக்' வெற்றி * 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது
ADDED : ஜூன் 11, 2024 12:25 AM

நியூயார்க்: 'டி-20' உலக கோப்பை தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது தென் ஆப்ரிக்கா. வங்கதேசஅணியை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நியூயார்க்கில் நேற்று நடந்த 'டி' பிரிவு 'டி-20'உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
தன்ஜிம் 'மூன்று'
தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (18), கேப்டன் மார்க்ரம் (4) ஏமாற்றினர். தன்ஜிம் பந்தில் ஸ்டப்ஸ் 'டக்' அவுட்டானார். போட்டியின் 18வது ஓவரை வீசிய டஸ்கின், கிளாசனை (46) போல்டாக்கினார். ரிஷாத், மில்லரை (29) அவுட்டாக்கினார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 113 ரன் மட்டும் எடுத்தது.
வங்கதேசம் சார்பில் தன்ஜிம் 3, டஸ்கின் 2 விக்கெட் சாய்த்தனர்.
'திரில்' வெற்றி
வங்கதேச அணியின் தன்ஜித் (9), கேப்டன் நஜ்முல் ஷாண்டோ( 14), லிட்டன் தாஸ் (9), அனுபவ சாகிப் (3) விரைவில் அவுட்டாகினர். தவ்ஹித் 37 ரன் எடுத்தார். கடைசி நேரத்தில் தென் ஆப்ரிக்க பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். மஹாராஜ் வீசிய கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டன.
முதல் 2 பந்தில், 4 ரன் (1 'வைடு', 1, 2) எடுக்கப்பட்டன. 3வது பந்தில் ஜாக்கர் (8) அவுட்டாக, கடைசி 3 பந்தில் 7 ரன் தேவைப்பட்டன. 4வது பந்தில் உதிரியாக 1 ரன் எடுக்கப்பட்டன.
5வது பந்தில் மகமதுல்லா(20) அடித்த பந்தை, எல்லை கோட்டுக்கு அருகில் மார்க்ரம், அசத்தலாக 'கேட்ச்' செய்தார். கடைசி பந்தில் டஸ்கின், ஒரு ரன் மட்டும் எடுக்க, வங்கதேச அணி 20 ஓவரில் 109/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
தொடர்ந்து 3 வெற்றியுடன் 6 புள்ளி எடுத்து 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெற்றது.
வெ.இண்டீசில் லமிச்சேன்
நேபாள அணி முன்னணி வீரர் லமிச்சேன் 23. பாலியல் புகாரில் சிக்கிய இவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்துள்ளார். இருப்பினும், உலக கோப்பை தொடரில் பங்கேற்க, நேபாள அரசு தலையிட்ட போதும், அமெரிக்காக விசா வழங்க மறுத்தது.
இதனால் டல்லாஸ், லாடர்ஹில் போட்டியில் பங்கேற்கவில்லை. நேபாள அணியின் அடுத்த இரு போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ளன. இங்கு வர அனுமதி கிடைத்துள்ளது. இதனால் தென் ஆப்ரிக்கா (ஜூன் 15), வங்கதேசத்துக்கு (ஜூன் 17) எதிராக லமிச்சேன் களமிறங்குகிறார்.
இக்கட்டான நிலையில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி முதல் இரு போட்டியில் அமெரிக்கா, இந்தியாவிடம் தோற்றது. ரன் ரேட்டும் (-0.150) மோசமாக உள்ளது. இன்று கனடா, அடுத்து அயர்லாந்தை (ஜூன் 16) சந்திக்கிறது. இந்த இரு போட்டியில் பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி பெற வேண்டும்.
மறுபக்கம் அமெரிக்க அணி இந்தியா, அயர்லாந்துக்கு எதிராக மோசமாக தோற்க வேண்டும். இது நடந்தால் ரன் ரேட் அடிப்படையில் 'சூப்பர்-8' செல்ல முயற்சிக்கலாம். இந்த இக்கட்டான நிலையில் இன்று நியூயார்க்கில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்க உள்ளது.