/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழகம்-டில்லி 'டிரா': ரஞ்சி கோப்பையில்
/
தமிழகம்-டில்லி 'டிரா': ரஞ்சி கோப்பையில்
ADDED : அக் 21, 2024 11:11 PM

புதுடில்லி: தமிழகம், டில்லி அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி 'டிரா' ஆனது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், டில்லி அணிகள் மோதின. தமிழக அணி முதல் இன்னிங்சில் 674/6 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் டில்லி அணி 264/8 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் டில்லி அணி முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. யாஷ் துல் (105) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின், 'பாலோ-ஆன்' பெற்ற டில்லி அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. சனத் சங்வான் (83) அரைசதம் கடந்தார். கேப்டன் ஹம்மத் சிங் (36), ஜான்டி சித்து (23) ஆறுதல் தந்தனர். ஆட்டநேர முடிவில் டில்லி அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்திருந்தது. சைனி (15) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3, சோனு யாதவ், அஜித் ராம் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி வழங்கப்பட்டது. டில்லி அணி ஒரு புள்ளி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் வென்றார்.
மும்பை வெற்றிமும்பையில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் மகாராஷ்டிரா 126, மும்பை 441 ரன் எடுத்தன. மகாராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 388 ரன் எடுத்தது. பின், 74 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா (39*), ஹர்திக் தாமோர் (21*) கைகொடுத்தனர். மும்பை அணி 2வது இன்னிங்சில் 75/1 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புஜாரா சாதனை
சவுராஷ்டிரா, சத்தீஸ்கர் அணிகளுக்கு இடையில் ராஜ்கோட்டில் நடந்த ரஞ்சி கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் 'டிரா' ஆனது. சவுராஷ்டிராவின் புஜாரா, 234 ரன் விளாசினார். முதல் தர போட்டியில் 18, ரஞ்சியில் 9வது இரட்டை சதம் விளாசினார். ரஞ்சி கோப்பையில் அதிக இரட்டை சதம் (9) விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பராஸ் டோக்ராவுடன் (இமாச்சல பிரதேசம், புதுச்சேரி) பகிர்ந்து கொண்டார் புஜாரா.
* முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (37 இரட்டை சதம்), இங்கிலாந்தின் வாலி ஹம்மன்ட் (36), எலியாஸ் ஹென்றி ஹென்ட்ரன் (22) உள்ளனர்.