ADDED : ஏப் 15, 2024 12:11 AM

மொகாலி: காயத்தால் அவதிப்படும் ஷிகர் தவான், 10 நாள் போட்டிகளில் பங்கேற்க முடியாது.
ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ளார் இந்தியாவின் ஷிகர் தவான். இவருக்கு காயம் ஏற்பட்டதால், ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் கேப்டனாக சாம் கர்ரான் களமிறங்கினார். இதில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.
இது குறித்து பஞ்சாப் அணியின் வளர்ச்சி குழு தலைவர் சஞ்சய் பங்கர் கூறியது:
தவானுக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அனுபவ வீரரான இவர் இல்லாதது அணிக்கு பெரிய பாதிப்பு. தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். மீண்டும் போட்டிக்கு திரும்ப 7-10 நாள் தேவைப்படலாம்.
ஜிதேஷ் சர்மாவை துணைக் கேப்டனாக நியமிக்கவில்லை. இம்முறை ஐ.பி.எல்., தொடர் துவங்குவதற்கு முன் சென்னையில் நடந்த கேப்டன்கள் கருத்தரங்கில் காய்ச்சல் காரணமாக தவான் பங்கேற்க முடியவில்லை. இங்கிலாந்தில் இருந்து சாம் கர்ரான் வருவதில் தாமதம் ஏற்பட்டது. வேறுவழியின்றி கருத்தரங்கிற்கு ஜிதேஷ் சர்மாவை அனுப்பி வைத்தோம். எங்களை பொறுத்தவரை தவான் இல்லாத பட்சத்தில் அணியை சாம் கர்ரான் தான் வழிநடத்துவார்.
பஞ்சாப் அணிக்கு தவான், பேர்ஸ்டோவ், அதர்வா டெய்ட் போன்றோர் எதிர்பார்த்த துவக்கம் அளிக்கவில்லை. மொகாலியின் முல்லான்புர் மைதான ஆடுகளம் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. இங்கு முதல் 6 ஓவரில் பெரும்பாலான அணிகள் ரன் சேர்க்க தடுமாறின. வரும் போட்டிகளில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன்.
இவ்வாறு சஞ்சய் பங்கர் கூறினார்.

