/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எங்கே * ஐ.சி.சி., புதிய அறிவிப்பு
/
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எங்கே * ஐ.சி.சி., புதிய அறிவிப்பு
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எங்கே * ஐ.சி.சி., புதிய அறிவிப்பு
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எங்கே * ஐ.சி.சி., புதிய அறிவிப்பு
ADDED : செப் 03, 2024 11:40 PM

துபாய்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025) தொடரின் பைனல் மீண்டும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுக்கு நடக்கும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் உள்ளூரில் 3, அன்னிய மண்ணில் 3 என மொத்தம் 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும்.
முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும். இதுவரை நடந்த இரண்டு தொடரின் பைனலுக்கும் இந்திய அணி முன்னேறியது. இதில், 2019-21ல் நியூசிலாந்திடம் (லார்ட்ஸ்), 2021-23ல் ஆஸ்திரேலியாவிடம் (சவுத்தாம்ப்டன்) தோற்று, கோப்பை இழந்தது.
தற்போது மூன்றாவது சீசன் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டி முடிவில் இந்திய அணி 68.52 சதவீத புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து ஆஸ்திரேலியா (62.50), நியூசிலாந்து (50.00), வங்கதேச (45.83) அணிகள் உள்ளன. இங்கிலாந்து (45.00), தென் ஆப்ரிக்கா (38.89), இலங்கை (33.33), பாகிஸ்தான் (19.05), வெஸ்ட் இண்டீஸ் (18.52) அணிகள் 5 முதல் 9 வரையிலான இடத்தில் உள்ளன.
இதனிடையே 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல் நடக்கும் தேதி, இடத்தை ஐ.சி.சி., அறிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கிலாந்தில், 2025, ஜூன் 11-15ல் பாரம்பரிய லார்ட்ஸ் மைதானத்தில் (லண்டன்), இப்போட்டி நடக்க உள்ளது. ஜூன் 16ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஐ.சி.சி., அறிவித்துள்ளது.