sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஆடுகளம் புரியலே...பேட்டிங் தெரியலே: 93 ரன்னில் சுருண்ட இந்தியா தோல்வி

/

ஆடுகளம் புரியலே...பேட்டிங் தெரியலே: 93 ரன்னில் சுருண்ட இந்தியா தோல்வி

ஆடுகளம் புரியலே...பேட்டிங் தெரியலே: 93 ரன்னில் சுருண்ட இந்தியா தோல்வி

ஆடுகளம் புரியலே...பேட்டிங் தெரியலே: 93 ரன்னில் சுருண்ட இந்தியா தோல்வி


ADDED : நவ 16, 2025 11:09 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: கோல்கட்டா டெஸ்டில் பேட்டிங் சரிந்ததால், இந்திய அணியால் 124 ரன்னை கூட 'சேஸ்' செய்ய முடியவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 159 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 189 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 30 ரன் முன்னிலை பெற்றது. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 93/7 ரன் எடுத்து, 63 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

பவுமா அரைசதம்: மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்களுக்கு தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா, பாஷ் தொல்லை கொடுத்தனர். 8வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தனர். பும்ரா 'வேகத்தில்' பாஷ் (25) போல்டானார். பும்ரா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பவுமா, டெஸ்டில் 26வது அரைசதம் எட்டினார். சிராஜ் ஓவரில் ஹார்மர் (7), மஹாராஜ் (0) நடையை கட்டினர். தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மனம் தளராமல் போராடிய பவுமா (55, 4x4) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியாவுக்கு 124 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

'டாப்-ஆர்டர்' சரிவு: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் சொதப்பினர். சவாலான ஈடன் கார்டன் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு நிதானமாக விளையாட தவறினர். யான்சென் வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் (0) அவுட்டானார். இவரது அடுத்த ஓவரில் ராகுல் (1) வெளியேற, சிக்கல் ஆரம்பமானது. காயம் காரணமாக சுப்மன் கில் களமிறங்காததால், நெருக்கடி ஏற்பட்டது. சைமன் ஹார்மர் 'சுழலில்' துருவ் ஜுரல் (13), ரிஷாப் பன்ட் (2), ரவிந்திர ஜடேஜா (18) அவுட்டாக, 64/5 ரன் என நிலைமை மோசமானது. இந்த நேரத்தில் சாமர்த்தியமாக மார்க்ரமை பந்துவீச அழைத்தார் பவுமா. இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. மார்க்ரம் வலையில் வாஷிங்டன் சுந்தர் (31) சிக்கினார். இந்தியா 77/7 ரன் எடுத்து தத்தளித்தது.

அக்சர் ஆறுதல்: மஹாராஜ் ஓவரின் (35வது) முதல் 4 பந்துகளில் அக்சர் படேல் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடிக்க, 16 ரன் எடுக்கப்பட்டன. இந்திய ரசிகர்களிடம் லேசான நம்பிக்கை பிறந்தது. ஆனால் 5வது பந்தில் அக்சர் (26), 6வது பந்தில் சிராஜை (0) வெளியேற்றி கதையை முடித்தார் மஹாராஜ். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 93 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. 30 ரன்னில் வென்ற தென் ஆப்ரிக்கா, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.ஆட்ட நாயகன் விருதை 8 விக்கெட் (4/30, 4/21) வீழ்த்திய ஹார்மர் தட்டிச் சென்றார்.

இரண்டாவது டெஸ்ட், நவ. 22ல் கவுகாத்தியில் துவங்குகிறது.

ரொம்ப மோசம்

கோல்கட்டா டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை கணிக்க முடியவில்லை. மூன்று நாட்களுக்குள் போட்டி முடிந்ததால், டெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் குறைந்தது. ஆடுகளம் மோசமாக அமைக்கப்பட்டிருந்ததாக, ஐ.சி.சி., கருதினால், தகுதி இழப்பு புள்ளி வழங்கப்படலாம். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில்,''ஈடன் கார்டன் ஆடுகளம் மோசமாக இருந்தது. இது போன்ற களத்தை அமைத்தால், தோற்பதற்கு தகுதியான அணி தான் இந்தியா,'' என்றார்.

கங்குலி காட்டம்

இந்திய முன்னாள் கேப்டனும் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி கூறுகையில்,''ஈடன் கார்டன் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றதாக இல்லை. இருப்பினும் 124 ரன்னை இந்திய அணி சேஸ் செய்திருக்க வேண்டும். பயிற்சியாளர் காம்பிர் விரும்பியது போல ஆடுகளம் அமைக்கப்பட்டது. போட்டிக்கு முன் நான்கு நாள் தண்ணீர் தெளிக்காமல் இருந்தால், ஆடுகளத்தின் நிலைமை இப்படி தான் இருக்கும். இதற்காக ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி மீது குறை சொல்ல முடியாது. இந்திய டெஸ்ட் அணியில் ஷமிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,''என்றார்.

யார் தவறு

இந்திய முன்னாள் வீரர் புஜாரா கூறுகையில்,''இந்திய பேட்டர்கள் ஆடுகளத்தை காரணம் காட்டி தப்பிக்க முடியாது. எந்த களத்திலும் சிறப்பாக பேட் செய்ய தயாராக இருக்க வேண்டும். சரியான 'புட்வொர்க்', 'ஸ்வீப் ஷாட்' அடித்து, தென் ஆப்ரிக்க பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். இதை இந்திய பேட்டர்கள் செய்ய தவறினர்,''என்றார்.

15 ஆண்டுக்கு பின்

தென் ஆப்ரிக்க அணி 15 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக 2010ல் நாக்பூர் டெஸ்டில் இன்னிங்ஸ், 6 ரன்னில் வென்றது.

* சொந்த மண்ணில் இந்தியா கடைசியாக பங்கேற்ற 6 டெஸ்டில் 4ல் தோல்வியை சந்தித்தது.

குறைந்த இலக்கு

இந்திய மண்ணில் குறைந்த இலக்கை நிர்ணயித்து வென்ற அணிகளில் தென் ஆப்ரிக்கா (124 ரன்) 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (107, மும்பை வான்கடே, 2004) உள்ளது.

* டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது குறைந்த ஸ்கோரை (124) 'சேஸ்' செய்து வெல்ல தவறியது. முன்னதாக 120 ரன்னை (எதிர், வெ.இ., பிரிட்ஜ்டவுன், 1997) எட்ட தவறியது.

கேட்டது கிடைத்தது: காம்பிர்

இந்திய அணி 'ஸ்பின்னர்'களுக்கு ஏற்ற ஆடுகளத்தை கேட்டது. பேட்டர் சாய் சுதர்சனை நீக்கிவிட்டு, ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் என நான்கு ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. ஆடுகளம் 2வது நாளில் மோசமடைய இந்திய பேட்டர்கள் திணறினர். இதை பயன்படுத்திய தென் ஆப்ரிக்க 'ஸ்பின்னர்' ஹார்மர், 8 விக்கெட் வீழ்த்தி, இந்தியாவின் திட்டத்தை தகர்த்தார். நியூசிலாந்துக்கு எதிரான கடந்த தொடரிலும் (2024) ஸ்பின்னர்ளுக்கு சாதகமான ஆடுகளம் தான் இந்தியாவுக்கு வினையாக அமைந்தது. இதனால் தலைமை பயிற்சியாளர் காம்பிரின் வியூகம் பற்றி கேள்வி எழுந்துள்ளது.

ஈடனில் சுப்மன் கில் 'ரிட்டையர்ட் ஹர்ட்' ஆக, மொத்தம் 38 விக்கெட் வீழ்த்தப்பட்டன. இதில் வேகங்கள் 16, ஸ்பின்னர்கள் 22 விக்கெட் கைப்பற்றினர்

காம்பிர் கூறுகையில்,''நாங்கள் கேட்டது போல தான் ஆடுகளத்தை அமைத்து கொடுத்தனர். ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி முழு ஒத்துழைப்பு அளித்தார். 124 ரன் என்பது சேஸ் செய்ய கூடிய இலக்கு தான். இது பேட் செய்ய முடியாத ஆடுகளம் அல்ல. நிதானமாக ஆடிய பவுமா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் போன்றோர் ரன் எடுத்தனர். இந்த ஆடுகளம் வீரர்களின் ஆட்ட நுணுக்கம், மனஉறுதிக்கு சவாலானது. நிதானமாக ஆடினால் ரன் சேர்க்கலாம். தாக்குதல் பாணியில் ஆடினால் ரன் சேர்ப்பது கடினம். சுழலுக்கு ஏற்ற களம் என்கின்றனர். ஆனால் பும்ரா (5 விக்கெட்), யான்சென், சிராஜ் போன்ற வேகங்கள் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்க கூடாது என்பதற்காக தான், முதல் நாளில் இருந்து ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவும் வகையில் ஆடுகளம் கேட்டோம். மோசமான ஆடுகளமோ முற்றிலும் சுழலுக்கு ஏற்ற களமோ கேட்கவில்லை. நாங்கள் வெற்றி பெற்றிருந்தால், ஆடுகளம் பற்றி விவாதித்திருக்க மாட்டார்கள்,''என்றார்.

பவுமாவுக்கு பாராட்டு

தென் ஆப்ரிக்க அணி கேப்டனாக 11 டெஸ்டில் 10ல் வெற்றி தேடித் தந்துள்ளார் பவுமா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று கொடுத்தார். இது குறித்து இந்திய முன்னாள் ஸ்பின்னர் கும்ளே கூறுகையில்,''தென் ஆப்ரிக்க வெற்றிக்கு கேப்டன் பவுமா முக்கிய காரணம். இவருக்கு போதிய அங்கீகாரம் அளிக்க தவறுகின்றனர். பேட்டராக தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தினார்,'' என்றார்.

பும்ரா எங்கே

நேற்று ஆட்டம் துவங்கியதும் அக்சர் படேல், ஜடேஜா என மாறி மாறி ஸ்பின்னர்கள் பந்துவீசினர். இதை பயன்படுத்தி பவுமா எளிதாக ரன் சேர்த்தார். இது பற்றி கும்ளே கூறுகையில்,''பும்ராவுக்கு முதல் ஓவரை கொடுக்காதது புரியாத புதிராக இருந்தது. கடைசி 3 விக்கெட்டுகளையும் நமது 'வேகங்கள்' தான் வீழ்த்தினர்,''என்றார்.

சுப்மன் 'டிஸ்சார்ஜ்'

கழுத்து பகுதி பிடிப்பில் இருந்து மீண்டு வரும் இந்திய கேப்டன் சுப்மன் கில் நேற்று கோல்கட்டா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார். நேற்று களமிறங்காத இவர், இரண்டாவது டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''சுப்மன் காயத்தின் தன்மை பற்றி ஆய்வு செய்து வருகிறோம். அணியின் 'பிசியோதெரபிஸ்ட்' விரைவில் முடிவு எடுப்பார்,''என்றார்.

நான்காவது இடம்

கோல்கட்டா டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி (54.17 வெற்றி சதவீதம்), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதுவரை விளையாடிய 8 டெஸ்டில், 4 வெற்றி, ஒரு 'டிரா', 3 தோல்வியை பதிவு செய்தது. தென் ஆப்ரிக்க அணி (66.67 வெற்றி சதவீதம், 3 டெஸ்டில், 2 வெற்றி, ஒரு தோல்வி) 2வது இடத்துக்கு முன்னேறியது.

முதலிடத்தில் ஆஸ்திரேலியா (100.00 வெற்றி சதவீதம்) நீடிக்கிறது. இலங்கை அணி (66.67) 3வது இடத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us