/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
முருகன் 'ஹாட்ரிக்' சிக்சர் * மதுரை அணி 'திரில்' வெற்றி
/
முருகன் 'ஹாட்ரிக்' சிக்சர் * மதுரை அணி 'திரில்' வெற்றி
முருகன் 'ஹாட்ரிக்' சிக்சர் * மதுரை அணி 'திரில்' வெற்றி
முருகன் 'ஹாட்ரிக்' சிக்சர் * மதுரை அணி 'திரில்' வெற்றி
ADDED : ஜூலை 06, 2024 11:28 PM

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை அணி, 4 விக்கெட்டில் சேலத்தை வீழ்த்தியது.
சேலத்தின் வாழப்பாடியில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம், மதுரை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
கவின் அரைசதம்
சேலம் அணிக்கு அபிஷேக், கவின் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஸ்வப்னில் வீசிய முதல் ஓவரில் சிக்சர் விளாசிய கவின், குர்ஜப்னீத் சிங் பந்தில் பவுண்டரி அடித்தார். மறுபக்கம் கணேஷ் வீசிய மூன்றாவது ஓவரில் அபிஷேக் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 50 ரன் எடுத்த போது, அலெக்சாண்டர் பந்தில் அபிஷேக் (20) அவுட்டானார்.
பின் வந்த முருகன் அஷ்வின் பந்தில் பவுண்டரி அடித்த கவின், கவுசிக் பந்தை சிக்சருக்கு விரட்டினார். சுழலில் அசத்திய முருகன், ராபின் பிஸ்ட்டை (5) அவுட்டாக்கினார்.
கவுசிக் பந்தில் மீண்டும் சிக்சர் அடித்த கவின், 32 வது பந்தில் அரைசதம் எட்டினார். இவருடன் இணைந்த விஷால் வைத்யா, வந்த வேகத்தில் அடுத்தடுத்து பவுண்டரி அடிக்க, சேலம் அணி 12 ஓவரில் 101/2 ரன் எடுத்தது. 45 பந்தில் 70 ரன் எடுத்த கவின், ஸ்வப்னில் சிங் பந்தில் அவுட்டானார்.
விவேக் (1), சாந்து (10) நிலைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த விஷால், அரைசதம் கடந்தார். கேப்டன் சந்திரன் (4) ரன் அவுட்டானார். சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 180 ரன் குவித்தது. விஷால் (56) அவுட்டாகாமல் இருந்தார். சுழலில் முருகன் அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தார்.
முருகன் அபாரம்
மதுரை அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் (8), சுரேஷ் லோகேஷ்வர் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. சுரேஷ் 69 ரன், ஜெகதீசன் கவுசிக் 57 ரன் எடுத்து அணிக்கு கைகொடுத்தனர். சரவணன் (7) ஏமாற்றினார். கடைசி ஓவரில் மதுரை வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டன. துணிச்சலாக போராடினார் முருகன் அஷ்வின். சன்னி சாந்து பந்து வீசினார். இதன் முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு மேலாக அனுப்பிய முருகன், 'ஹாட்ரிக்' சிக்சர் அடிக்க, மதுரை அணி 19.3 ஓவரில் 185/6 ரன் எடுத்து 'திரில்' வெற்றி பெற்றது. முருகன் (20) அவுட்டாகாமல் இருந்தார்.