/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மதுரை அணி ஏமாற்றம் * திருச்சி அணி எழுச்சி
/
மதுரை அணி ஏமாற்றம் * திருச்சி அணி எழுச்சி
ADDED : ஜூலை 09, 2024 10:57 PM

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை அணி 67 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் 8வது சீசன் நடக்கிறது. வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மதுரை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
வசீம் அரைசதம்
திருச்சி அணிக்கு வசீம் அகமது, அர்ஜுன் மூர்த்தி (1) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. பின் வந்த ஷ்யாம் சுந்தர், கிரண் ஆகாஷ் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் அலெக்சாண்டர் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் வசீம்.
தொடர்ந்து ஆகாஷ், நிஷாந்த் பந்துகளில் சிக்சர் விளாசினார் வசீம். அலெக்சாண்டர் பந்தில் தன் பங்கிற்கு சிக்சர் அடித்த ஷ்யாம், 28 பந்தில் 30 ரன் எடுத்து கிளம்பினார். முருகன் அஷ்வின் பந்தை சிக்சருக்கு விரட்டிய வசீம், 31 வது பந்தில் அரைசதம் எட்டினார்.
சரவணன் வீசிய 13வது ஓவரில் திருச்சி அணி ரன் மழை பொழிந்தது. இதில் வசீம் ஒரு சிக்சர் அடிக்க, சஞ்சய் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, மொத்தம் 21 ரன் எடுக்கப்பட்டன.
அடுத்து வந்த ஆகாஷ் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என விளாசினார் வசீம். சஞ்சய் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். திருச்சி அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 193 ரன் குவித்தது. வசீம் (90), சஞ்சய் (60) அவுட்டாகாமல் இருந்தனர்.
பேட்டிங் சரிவு
மதுரை அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த், சுரேஷ் (7) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ஜெகதீசன் (1), சதுர்வேத் (7), அக்ரம் கான் (11) நிலைக்கவில்லை. ஸ்வப்னில் சிங் (18), உதிரசாமி (17) உதவிய போதும் வெற்றிக்கு போதவில்லை. மதுரை அணி 16.4 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.