ADDED : ஜூலை 20, 2026 09:26 PM

லண்டன்: ''ஓய்வு பெறும் வரை என் மீதான விமர்சனங்கள் ஓயப்போவதில்லை,'' என, இந்தியாவின் ரோகித் சர்மா தெரிவித்தார்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது போட்டியில் இந்திய அணி (360/7) 27 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் (387/3) தோல்வியடைந்தது. தொடரை 1-2 என இழந்தது. இப்போட்டியில் அசத்திய ரோகித் சர்மா (138), லார்ட்சில் நடந்த ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரரானார். இவர், இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ரோகித் கூறியது: நான் அறிமுகமான நாளில் இருந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். இது, நான் ஓய்வு பெறும் வரை நீடிக்கும். எனது கவனம் முழுவதும் அணியின் வெற்றிக்கு எப்படி பங்களிப்பது என்பதில் மட்டுமே இருக்கும். வெளியில் இருந்து வரும் தேவையற்ற விமர்சனங்கள் அப்படியே இருக்கட்டும். போட்டியில் சிறப்பாக 'பேட்' செய்து, அணிக்கு வெற்றி தேடித்தருவது மட்டுமே என்னுடைய வேலை. எனது அறிமுக போட்டியில் இருந்து இதைத்தான் செய்து வருகிறேன்.
இங்கிலாந்தில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். இங்குள்ள தட்பவெப்பநிலை, ஆடுகளத்தின் தன்மை 'பேட்' செய்வதற்கு நன்றாக இருக்கும். ஏற்கனவே நிறைய போட்டிகளில் விராத் கோலியுடன் இணைந்து 'பேட்' செய்துள்ளேன். ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு, போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவோம்.
லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த மகிழ்ச்சி. ஆனால் போட்டியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. போதிய அனுபவம் இல்லாத எங்கள் அணியின் இளம் பவுலர்கள், இப்போட்டியின்மூலம் சிறந்த பாடம் கற்றுக்கொண்டிருப்பர்.
இவ்வாறு ரோகித் கூறினார்.
