/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சூர்யாவிடம் சாம்சன் சொன்னது என்ன: '96'ல் நடந்த ருசிகரம்
/
சூர்யாவிடம் சாம்சன் சொன்னது என்ன: '96'ல் நடந்த ருசிகரம்
சூர்யாவிடம் சாம்சன் சொன்னது என்ன: '96'ல் நடந்த ருசிகரம்
சூர்யாவிடம் சாம்சன் சொன்னது என்ன: '96'ல் நடந்த ருசிகரம்
ADDED : அக் 13, 2024 11:38 PM

ஐதராபாத்: சோதனைகளை கடந்து சாதித்திருக்கிறார் சஞ்சு சாம்சன். 40 பந்தில் சதம் விளாசிய இவர், சிறந்த துவக்க பேட்டராக உருவெடுத்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட்கீப்பர், பேட்டர் சஞ்சு சாம்சன் 29. கிடைத்த வாய்ப்புகளை பல முறை வீணடித்தார். சமீபத்திய இலங்கைக்கு எதிரான 'டி-20' தொடரில் வரிசையாக இரண்டு முறை 'டக்' அவுட்டானார். வங்கதேசத்திற்கு எதிரான முதலிரண்டு 'டி-20' போட்டியில் (29, 10) சோபிக்கவில்லை.
ஐதராபாத்தில் நடந்த வங்கதேசத்துடனான மூன்றாவது போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார். 'டி-20' அரங்கில் சதம் (40 பந்து) விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார். இவருக்கு பக்கபலமாக கேப்டன் சூர்யகுமார் (75 ரன்) விளையாடினார். இந்திய அணி 20 ஓவரில் 297/6 ரன் எடுத்து சாதனை படைத்தது. பின் களமிறங்கிய வங்கதேச அணி 164/7 ரன் மட்டும் எடுக்க, இந்தியா 133 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் கூறியது: இலங்கை தொடரில் இரண்டு முறை 'டக்' அவுட்டான நிலையில், அடுத்து வாய்ப்பு கிடைக்குமா என சந்தேகம் எழுந்தது. ஆனால், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என பயிற்சியாளர் காம்பிர், கேப்டன் சூர்யகுமார் உறுதி அளித்தனர். 'டி-20' அரங்கில் இந்திய அணிக்காக விளையாடும் போது மனதளவில் நெருக்கடி ஏற்படும். தோல்விகள், நெருக்கடியை சமாளிக்க கற்றுக் கொண்டேன். இதற்கு கேப்டன், பயிற்சியாளரின் ஆதரவு தான் காரணம்.
எதற்கும் தயார்: வங்கதேச தொடர் துவங்குவதற்கு மூன்று வாரத்திற்கு முன் காம்பிர், சூர்யகுமார், துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் அடங்கிய குழுவினர் எனக்கு 'மெசேஜ்' அனுப்பினர். அதில் 'நான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தனர். இதனால், சிறந்த முறையில் தயாராக போதிய கால அவகாசம் கிடைத்தது. பேட்டிங் வரிசையில் 1 முதல் 6 வரை எந்த இடத்திலும் என்னால் விளையாட முடியும்.
வங்தேசத்திற்கு எதிரான முதல் இரு போட்டியில் பந்தை சரியான நேரத்தில் கணித்து ஆடினேன். ஆனாலும் பெரிய 'ஸ்கோரை' எட்ட முடியவில்லை. ஐதராபாத்தில் ரன் குவிக்க திட்டமிட்டேன். டஸ்கின் அகமது ஓவரில் வரிசையாக நான்கு பவுண்டரிகள் அடித்தது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.
நல்ல அறிவுரை: எனக்கு உறுதுணையாக சூர்யகுமார் (செல்லமாக சூர்யா) விளையாடினார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. நான் 96 ரன்னில் இருந்த போது, 'அடுத்த பந்தையும் விளாசட்டுமா' என சூர்யாவிடம் கேட்டேன். அதற்கு'கொஞ்சம் நிதானமாக விளையாடு. சதம் அடிக்க வாய்ப்பு உண்டு' என ஆலோசனை கூறினார். (இதை சாம்சன் ஏற்கவில்லை. மெஹிதி ஹசன் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தான் சதம் எட்டினார்). 'ஆக்ரோஷமாக விளையாடு, தேவைப்பட்டால் அடக்கி வாசிக்கவும்' என சூர்யா, காம்பிர் அடிக்கடி சொல்வது வழக்கம். இந்த அறிவுரை எனக்கு பொருத்தமானது.
இவ்வாறு சாம்சன் கூறினார்.
சூர்யகுமார் கூறுகையில்,''தன்னலமற்ற முறையில் விளையாடிய சாம்சன், சதம் அடித்ததில் மகிழ்ச்சி,''என்றார்.