/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
என்னாச்சு இந்திய பந்துவீச்சு: வீரர்கள் தேர்வில் குழப்பம்
/
என்னாச்சு இந்திய பந்துவீச்சு: வீரர்கள் தேர்வில் குழப்பம்
என்னாச்சு இந்திய பந்துவீச்சு: வீரர்கள் தேர்வில் குழப்பம்
என்னாச்சு இந்திய பந்துவீச்சு: வீரர்கள் தேர்வில் குழப்பம்
ADDED : டிச 04, 2025 10:54 PM

ராய்ப்பூர்: ராய்ப்பூர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன் குவித்தும் தோல்வி அடைந்தது. இதற்கு தரமான பவுலர்கள் தேர்வு செய்யப்படாததே முக்கிய காரணம்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. ராய்ப்பூரில் (சத்தீஸ்கர்) நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி, ருதுராஜ் சதம் விளாச, இந்தியா 358/5 ரன் குவித்தது. பின் இந்திய பவுலர்கள் தடுமாற, தென் ஆப்ரிக்க அணி 49.2 ஓவரில் 362/6 ரன்னை 'சேஸ்' செய்தது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி கொடுத்தது.
கிருஷ்ணா ஏமாற்றம்: அர்ஷ்தீப் சிங் (54/2) தவிர மற்ற இந்திய பவுலர்கள் சோபிக்கவில்லை. ஹர்ஷித் ராணா (70/1), பிரசித் கிருஷ்ணா (85/2), குல்தீப் யாதவ் (78/1) ரன்னை வாரி வழங்கினர். 37வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, 16 ரன் விட்டுக் கொடுத்த போது, களத்திலேயே ரோகித் சர்மா ஆத்திரப்பட்டார். 2022ல் அறிமுகமான அர்ஷ்தீப், 13 ஒருநாள் போட்டியில் தான் பங்கேற்றுள்ளார். ஆனால், பயிற்சியாளர் காம்பிர் மனதை கவர்ந்த ஹர்ஷித் ராணாவுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
2025, பிப்ரவரியில் அறிமுகமான ராணா, 10 போட்டியில் விளையாடிவிட்டார். 2021ல் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா 20 போட்டியில் பங்கேற்றிருக்கிறார். கடந்த 5 ஒருநாள் போட்டியில் 9.33, 9, 7.42, 6.54, 10.20 என இவரது 'எகானமி' மோசமாக உள்ளது. பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்ட நிலையில் சிராஜ், ஷமியை சேர்த்திருக்க வேண்டும். சுழற்பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்காதது தவறு. 2027ல் உலக கோப்பை தொடர் (50 ஓவர்) நடக்க உள்ள நிலையில், தரமான பவுலர்களை இந்திய தேர்வாளர்கள் கண்டறிய வேண்டும்.
'ரோ-கோ' எதிர்காலம்: இது பற்றி இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' ஹர்பஜன் கூறுகையில்,''பும்ரா இல்லாமல் வெற்றி பெறும் வழியை கண்டறிய வேண்டும். பிரசித் கிருஷ்ணா இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஷமி எங்கே என தெரியவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா இடம் பெறாத நிலையில், சிராஜ் கைகொடுத்தார். இவரை போன்ற சிறந்த வீரர், ஒருநாள் போட்டிக்கும் தேவைப்படுகிறார். 'சுழலில்' அசத்த வருண் சக்ரவர்த்தியை சேர்க்க வேண்டும்.
அனுபவ வீரர்களான ரோகித்-கோலி (சுருக்கமாக ரோ-கோ) அசத்துகின்றனர். இவர்களது எதிர்காலம் பற்றி கிரிக்கெட் அரங்கில் அதிகம் சாதிக்காதவர்கள் முடிவு செய்வது துரதிருஷ்டவசமானது,''என்றார்.
500 ரன் போதுமா: ஸ்ரீகாந்த்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறுகையில்,''ராயப்பூர் போட்டியில் இந்திய அணியினர் அருமையாக பேட் செய்தனர். இன்னும் கூடுதலாக 20 ரன் எடுத்திருக்கலாம் என சொல்வது பேராசை. ஒருவேளை 500 ரன் எடுத்தால் போதுமானதாக இருக்குமா? 358 ரன் என்பதே பெரிய இலக்கு தான். பும்ரா இல்லாததால் பந்துவீச்சு எடுபடவில்லை, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா போன்றோர் சில நேரம் நன்கு பந்துவீசுவர். சில நேரம் ரன்னை வாரி வழங்குவர். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கோப்பை வெல்ல வருண் சக்ரவர்த்தி முக்கிய காரணம். இவரை ஏன் தேர்வு செய்ய மறுக்கின்றனர். அடுத்து நடக்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவரை சேர்க்க வேண்டும்,''என்றார்.
பனிப்பொழிவு பிரச்னை
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''ராய்ப்பூர் போட்டியில் இந்தியா 'டாஸ்' வெல்ல தவறியது சிக்கலை ஏற்படுத்தியது. இரண்டாவதாக பந்துவீசிய போது பனிப்பொழிவு அதிகம் இருந்தது. மைதானத்தின் பனியில் பட்ட பந்து, குளியல் சோப் போல ஈரமாக இருந்தது. இதனால் இந்திய பவுலர்களுக்கு 'கிரிப்' கிடைக்கவில்லை. 'பீல்டிங்' செய்வதும் சிரமமாக இருந்தது,''என்றார்.

