ADDED : மார் 28, 2024 10:50 PM

புதுடில்லி: இந்திய அணி வீரர் சூர்யகுமார் 33. சர்வதேச 'டி-20' ல் 60 போட்டிகளில் பங்கேற்ற இவர் 2141 ரன் எடுத்துள்ளார். உலகின் 'நம்பர்-1' பேட்டராக திகழ்கிறார். கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த 'டி-20' போட்டியில் கேப்டனாக களமிறங்கிய இவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அடுத்து 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவுக்கு' ஆப்பரேஷன் செய்தார்.
தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், காயத்தில் இருந்து மீண்டு வரத் தேவையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக களமிறங்க முடியாமல் உள்ளார். தவிர வரும் ஜூன் 2-29ல் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.
இதனால் சூர்யகுமாரை அவசரப்பட்டு ஐ.பி.எல்., தொடரில் களமிறக்க வேண்டாம் என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் வெளியான செய்தியில்,' சூர்யகுமார் சிறப்பான முறையில் தேறி வருகிறார். விரைவில் மும்பை அணிக்கு திரும்புவார். எனினும் அடுத்த சில போட்டிகளில் இவர் பங்கேற்க மாட்டார். 'டி-20' உலக கோப்பை தொடர் வரவுள்ளதால் இவர் விஷயத்தில் அவசரப்படவில்லை,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

