ADDED : ஜூலை 20, 2024 11:16 PM

புதுடில்லி: காம்பிருக்கு விருப்பமானவர்கள் துணைப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
இலங்கை செல்லும் இந்திய அணி மூன்று 'டி-20' (ஜூலை 27, 28, 30), மூன்று ஒருநாள் போட்டிகளில் (ஆக. 2, 4, 7) பங்கேற்கிறது. 'டி-20' அணிக்கு சூர்யகுமாரும் ஒருநாள் போட்டி அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக செயல்பட உள்ளனர். புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பிர், பணியை துவக்குகிறார்.
துணைப் பயிற்சியாளர்களாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர், நெதர்லாந்து முன்னாள் பேட்டர் ரியான் டென் டசாட்டே நியமிக்கப்பட உள்ளனர். இருவரும் காம்பிருக்கு நெருக்கமானவர்கள். கோல்கட்டா அணிக்கு காம்பிர் ஆலோசகராக இருந்த போது, அவருடன் பணியாற்றியவர்கள். மனதளவில் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதில் அபிஷேக் வல்லவர். தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங் போன்றவர்களை பட்டை தீட்டியவர். 'பீல்டிங்' பயிற்சியாளராக திலிப் தொடர உள்ளார்.
மார்கல் வாய்ப்பு: பவுலிங் பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வீரர்களான வினய் குமார், பாலாஜி, தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் பெயர்களை காம்பிர் பரிந்துரை செய்துள்ளார். இதில் மார்னே மார்கலுக்கு வாய்ப்பு அதிகம். லக்னோ, கோல்கட்டா அணிகளில் காம்பிர் உடன் பணியாற்றியவர் மார்கல். பாகிஸ்தான் அணிக்கும் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார். இவருக்கு வாய்ப்பு கிடைத்தால், ஆஸ்திரேலியாவின் ஜோ டாவ்சிற்கு பின் இந்திய அணியின் அன்னிய பவுலிங் பயிற்சியாளராவார். 2014ல் இந்திய பயிற்சியாளராக டன்கன் பிளட்சர் இருந்த போது, பவுலிங் பயிற்சியாளராக பணியாற்றினார் ஜோ டாவ்ஸ்.
இந்திய வீரர்கள் நாளை மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் கொழும்பு புறப்படுகின்றனர். இவர்களுடன் அபிஷேக், திலிப் செல்வது உறுதி. தற்போது அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் எல்.ஏ., நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றுள்ளார் ரியான் டென் டசாட்டே. இவர், நியூயார்க்கில் இருந்து நேரடியாக கொழும்பு செல்லலாம்.