/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
புதிய டெஸ்ட் கேப்டன் யார்: பும்ராவை துரத்தும் ரிஷாப் பன்ட்
/
புதிய டெஸ்ட் கேப்டன் யார்: பும்ராவை துரத்தும் ரிஷாப் பன்ட்
புதிய டெஸ்ட் கேப்டன் யார்: பும்ராவை துரத்தும் ரிஷாப் பன்ட்
புதிய டெஸ்ட் கேப்டன் யார்: பும்ராவை துரத்தும் ரிஷாப் பன்ட்
ADDED : ஜன 12, 2025 11:20 PM

புதுடில்லி: அடிக்கடி காயம் அடையும் பும்ராவை, டெஸ்ட் அணிக்கு நீண்ட கால கேப்டனாக நியமிக்க முடியாது. இதனால் தேர்வாளர்களின் பார்வை ரிஷாப் பன்ட், ஜெயஸ்வால் மீது விழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில், இந்திய 'வேகப்புயல்' பும்ரா அசத்தினார். பெர்த் டெஸ்டில் கேப்டனாக களமிறங்கி வெற்றி தேடித் தந்தார்.
முதுகில் காயம்: பின் சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா விலக, மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இப்போட்டியில் முதுகுப் பகுதியில் பிடிப்பு ஏற்பட, பும்ராவால் முழுமையாக பந்துவீச முடியவில்லை. இதனால், இந்தியா தோற்றது. மொத்தம் 32 விக்கெட் வீழ்த்திய இவர், தொடர் நாயகன் விருது வென்றார். 204 சர்வதேச போட்டியில் 443 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரோகித் சர்மா ஓய்வை நெருங்கும் நிலையில், புதிய கேப்டனை கண்டறிய வேண்டியுள்ளது.
'பிளான் பி' என்ன: இது பற்றி மும்பையில் நடந்த கூட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் விவாதித்தனர். புதிய கேப்டன் நியமிக்கப்படும் வரை இன்னும் சில மாதங்களுக்கு அணியை வழிநடத்த தயார் என ரோகித் தெரிவித்தார். புதிய கேப்டனாக பும்ராவை நியமிப்பது பற்றி பேசினர். 31 வயதான இவர், அடிக்கடி காயம் அடைவதால், நீண்ட கால கேப்டனாக நியமிக்க இயலாது. இவரால், இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் (2025, ஜூன்-2027, ஜூன்) முழுமையாக பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து 'பிளான் பி' பற்றி பரிசீலித்தனர். இதன்படி வலுவான துணைக் கேப்டனை நியமிப்பது; பின் அவரையே நிரந்தர கேப்டனாக அறிவிப்பது' என முடிவு செய்தனர். இதற்கு ரிஷாப் பன்ட், ஜெய்ஸ்வால் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
தகுதியானவர் ரிஷாப்இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தேவாங் காந்தி கூறுகையில்,''பும்ரா 45, ரிஷாப் 43 டெஸ்டில் விளையாடியுள்ளனர். ரிஷாப்பிற்கு 27 வயதாகிறது. தனது 23வது வயதில் தனிஒருவனாக அசத்தி, பிரிஸ்பேன் டெஸ்டில் (21, 89*ரன், எதிர், ஆஸி., 2021) இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். சிறந்த கீப்பர், பேட்டர், 'மேட்ச் வின்னராக' திகழ்கிறார். இவரை துணைக் கேப்டனாக நியமிக்கலாம்,''என்றார்.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட்கீப்பர் தீப்தாஸ் குப்தா கூறுகையில்,'' இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், சாம்பியன்ஸ் டிராபி, 'டி-20' உலக கோப்பை, ஐ.பி.எல்., என நிறைய போட்டிகள் உள்ளன. கேப்டனாக பும்ராவுக்கு அதிக சுமை காத்திருக்கிறது. இவருக்கு உதவ, துணைக் கேப்டனாக ரிஷாப் பன்ட்டை நியமிக்கலாம். இளம் பேட்டிங் 'ஜீனியஸ்' ஜெய்ஸ்வால் 23, சிறிது காலம் காத்திருக்கலாம்,''என்றார்.
சாம்பியன்ஸ் டிராபியில் சந்தேகம்
பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி (பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ளது. இதற்கான உத்தேச அணியை ஜன.12க்குள் அறிவிக்க வேண்டும். இந்திய தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. பும்ராவின் காயம் தொடர்பான மருத்துவ அறிக்கைக்காக தேர்வாளர்கள் காத்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் 15 பேர் அணியில் இடம் பெறுவாரா அல்லது 'ரிசர்வ்' வீரராக சேர்க்கப்படுவாரா என்பது தெரிய வரும். பும்ரா முழுமையாக குணமடைய, மார்ச் முதல் வாரம் வரை தேவைப்படலாம். வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்துக்கு (மார்ச் 2) எதிரான லீக் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம். அரையிறுதி (மார்ச் 4, 5), பைனலில் (மார்ச் 9) விளையாடலாம்.
பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''பும்ராவுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை. முகுதுப்பகுதியில் வீக்கம் மட்டுமே உள்ளது. இவரது காயத்தின் தன்மையை பெங்களூரு, தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இங்கு மூன்று வாரம் தங்கியிருப்பார். பின் சில பயிற்சி போட்டிகளில் பங்கேற்று, உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்,''என்றார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான உத்தேச அணியில் பிப்.12 வரை மாற்றம் செய்யலாம். பும்ரா இடம் பெறாத பட்சத்தில், காயத்தில் இருந்து மீண்ட ஷமி கைகொடுக்கலாம்.