/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கட்டாக்கில் கலக்குமா இந்தியா: தென் ஆப்ரிக்காவுடன் 'டி-20' மோதல்
/
கட்டாக்கில் கலக்குமா இந்தியா: தென் ஆப்ரிக்காவுடன் 'டி-20' மோதல்
கட்டாக்கில் கலக்குமா இந்தியா: தென் ஆப்ரிக்காவுடன் 'டி-20' மோதல்
கட்டாக்கில் கலக்குமா இந்தியா: தென் ஆப்ரிக்காவுடன் 'டி-20' மோதல்
ADDED : டிச 08, 2025 11:24 PM

கட்டாக்: கட்டாக்கில் இன்று நடக்கும் முதல் 'டி-20' போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் சூர்யகுமார், அபிஷேக் சர்மா உள்ளிட்ட பேட்டர்கள் தாக்குதல் (அட்டாக்) பாணியில் விளையாடினால், இந்தியா சுலப வெற்றி பெறலாம்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடக்க உள்ளது.
தொடரும் வெற்றிநடை: 'டி-20' அரங்கில் இந்திய அணி அசுர பலத்துடன் உள்ளது. தொடர்ந்து 8 போட்டியில் வென்று, 'டி-20' உலக கோப்பையை (29.6.2024, பார்படாஸ்) கைப்பற்றியது. இதற்கு பின் பங்கேற்ற 32 போட்டிகளில் 24ல் வென்றது (82 சதவீத வெற்றி). இதில் தொடர்ந்து 7 போட்டியில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை (28.9.2025, துபாய்) வென்றதும் அடங்கும். 'டி-20' தொடர் எதையும் இழக்கவில்லை. அடுத்த ஆண்டு (பிப்.7-மார்ச் 8) இந்தியா, இலங்கையில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கு ஆயத்தமாகிறது. இதற்கு முன் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்துக்கு எதிராக தலா 5 என 10 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இவை உலக கோப்பை தொடருக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.
அபிஷேக் அசத்தல்: கடந்த 'டி-20' உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இம்முறை சொந்த மண்ணில் மீண்டும் எதிர்கொள்கிறது. கழுத்து பகுதி காயத்தில் இருந்த மீண்ட துணை கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா அதிரடி துவக்கம் தரலாம். சமீபத்திய ஆஸ்திரேலிய 'டி-20' தொடரில் 163 ரன் எடுத்த அபிஷேக், உள்ளூர் சயத் முஷ்டாக் அலி 'டி-20' தொடரில் பஞ்சாப் அணிக்காக 304 ரன் (சராசரி 50.66, ஸ்டிரைக் ரேட் 249.18) குவித்தார். பெங்கால் அணிக்கு எதிராக 52 பந்தில் 148 ரன் எடுத்தார். இவரது விளாசல் தொடரலாம். 'மிடில் ஆர்டரில்' திலக் வர்மா கைகொடுக்கலாம்.
சுதாரிப்பாரா சூர்யா: கேப்டன் சூர்யகுமார் தடுமாறுவது பலவீனம். 2025ல், 15 இன்னிங்சில் 184 ரன் (சராசரி 15.33) ரன் தான் எடுத்துள்ளார். 2022ல் 187 ஆக இருந்த இவரது 'ஸ்டிரைக் ரேட்', இப்போது 127.77 ஆக சரிந்துள்ளது. 'மிஸ்டர் 360 டிகிரி' வீரராக மீண்டும் அவதாரம் எடுக்க வேண்டும். விக்கெட்கீப்பர் இடத்திற்கு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவுகிறது. துவக்க வீரராக 3 சதம் அடித்தவர் சாம்சன். இதில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2 சதம் அடித்தார். ஆனால், சுப்மன் வரவுக்கு பின் துவக்க வீரர் இடத்தை பறிகொடுத்தார்.
வருகிறார் பாண்ட்யா: தொடை பகுதி காயத்தில் இருந்து மீண்ட 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா இடம் பெறுவது பலம். சயத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணிக்காக 42 பந்தில் 77 ரன் (எதிர், பஞ்சாப்) விளாசினார். ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் இடையே போட்டி காணப்படுகிறது. பந்துவீச்சில் மிரட்ட பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி உள்ளனர்.
மில்லர் பலம்: தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம், ஹெண்ட்ரிக்ஸ், பிரவிஸ், குயின்டன், 'கில்லர்' மில்லர், யான்சென் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பது பலம். பந்துவீச்சில் யான்சென், மஹாராஜ், நோர்க்கியா கைகொடுக்கலாம்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 31 சர்வதேச 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 18, தென் ஆப்ரிக்கா 12ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* ஒடிசா பாராபதி மைதானத்தில் 3 'டி-20' போட்டிகள் நடந்துள்ளன. இரண்டில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவிடம் (2015,22) தோற்றது. ஒரு போட்டியில் இலங்கையை (2017) வீழ்த்தியது.
ஆடுகளம் எப்படி
கட்டாக்கில் புதிதாக அமைக்கப்பட்ட செம்மண் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இரவு நேர பனிப்பொழிவு பவுலர்களுக்கு தொல்லை தரும். மழைக்கு வாய்ப்பு இல்லை. குளிர்ந்த வானிலை காணப்படும்.
5,000 ரசிகர்கள்
கட்டாக் பாராபதி மைதானத்தில் நேற்று இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அனுமதி இலவசம் என்பதால், சுமார் 5,000 ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாகம் அளித்தனர். சுப்மன் கில் இரண்டு மணி நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். பும்ரா, அர்ஷ்தீப், அக்சர் படேல் பந்துகளை சந்தித்தார். கழுத்து பகுதியில் வலி எதையும் உணரவில்லை. விக்கெட் கீப்பர் சாம்சனும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். நேற்று முன் தினம் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்ட்யா நேற்று வரவில்லை. தொடை பகுதி காயத்தில் இருந்து மீண்ட இவர், பயிற்சியை புறக்கணித்தது சந்தேகத்தை கிளப்பியது. இது பற்றி கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''பாண்ட்யா நலமாக உள்ளார். காயம் ஏற்படக் கூடாது என கருதி, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சியை தவிர்த்தார்,''என்றார்.

