/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா வருமா ஆசிய கோப்பை: பி.சி.சி.ஐ., புது வியூகம்
/
இந்தியா வருமா ஆசிய கோப்பை: பி.சி.சி.ஐ., புது வியூகம்
இந்தியா வருமா ஆசிய கோப்பை: பி.சி.சி.ஐ., புது வியூகம்
இந்தியா வருமா ஆசிய கோப்பை: பி.சி.சி.ஐ., புது வியூகம்
ADDED : செப் 30, 2025 10:55 PM

துபாய்: இந்திய வீரர்களின் கைக்கு ஆசிய கோப்பை கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை 'டி-20' தொடரின் பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மொசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் விரும்பவில்லை. எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு துணை தலைவர் கலித் அல் ஜரூனி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதை ஏற்காத நக்வி, கோப்பையுடன் தனது ஓட்டலுக்கு சென்று விட்டார். இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமல் வெற்றியை கொண்டாடினர். ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இறங்கியுள்ளது.
கடும் விவாதம்: துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி.,) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா, முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பி.சி.சி.ஐ., நிர்வாகிகள், நக்வி இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. 'இந்திய வீரர்கள் தன்னிடம் இருந்து கோப்பையை பெற மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை,' என்றார் நக்வி. இதற்கு பி.சி.சி.ஐ., தரப்பில்,' துபாயில் உள்ள ஏ.சி.சி., அலுவலகத்தில் இந்திய அணிக்கான கோப்பை, வீரர்களுக்கான பதக்கங்களை ஒப்படையுங்கள். அதை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்களே செய்து கொள்கிறோம்,' என தெரிவிக்கப்பட்டது. இதை நக்வி ஏற்கவில்லை. 'மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த வேண்டும். தானே இந்திய அணிக்கு கோப்பை வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். இது நடைமுறைக்கு சாத்தியமல்ல.
பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''நக்வி நடத்தும் நாடகத்திற்கு ராஜிவ் சுக்லா எதிர்ப்பு தெரிவித்தார். பைனலில் வென்ற இந்திய அணிக்கு உடனடியாக ஆசிய கோப்பையை வழங்க வேண்டும். இது ஏ.சி.சி.,க்கு சொந்தமான கோப்பை. தனிப்பட்ட நபர் உரிமை கொண்டாட முடியாது.
பதவி நீக்கம்: ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழியை ஆராய்ந்து வருகிறோம். ஏ.சி.சி., உறுப்பு நாடுகள் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியுள்ளோம். துபாயில் உள்ள ஏ.சி.சி., அலுவலகத்தில் இருந்து இந்தியாவுக்கு கோப்பையை அனுப்பி வைக்க வேண்டும்.ஆசிய கோப்பையை நக்வி தனது ஓட்டலுக்கு எடுத்து சென்றது தவறு. கிரிக்கெட்டின் உயர் பதவியில் இவர் தொடர கூடாது. விரைவில் பதவியில் இருந்து நீக்கப்படுவார். வரும் நவம்பரில் நடக்கும் ஐ.சி.சி., கூட்டத்தில் இவர் மீது புகார் எழுப்புவோம்,''என்றார்.