/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தொடரை வெற்றியுடன் துவக்குமா இந்தியா: வங்கதேசத்துடன் 'டி-20' மோதல்
/
தொடரை வெற்றியுடன் துவக்குமா இந்தியா: வங்கதேசத்துடன் 'டி-20' மோதல்
தொடரை வெற்றியுடன் துவக்குமா இந்தியா: வங்கதேசத்துடன் 'டி-20' மோதல்
தொடரை வெற்றியுடன் துவக்குமா இந்தியா: வங்கதேசத்துடன் 'டி-20' மோதல்
ADDED : அக் 05, 2024 11:15 PM

குவாலியர்: முதல் 'டி-20' போட்டியில் 'வேகத்தில்' மயங்க் யாதவ், 'சுழலில்' வருண் சக்ரவர்த்தி மிரட்ட காத்திருக்கின்றனர்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ம.பி.,யில் உள்ள குவாலியரில் இன்று நடக்கிறது.
களத்தில் இளம் படை: சுப்மன், ரிஷாப், ஜெய்ஸ்வால், சிராஜ், அக்சர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்ட நிலையில், இளம் இந்திய அணி களமிறங்குகிறது. கேப்டன் சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா மட்டுமே பிரபலமானவர்கள். 'டி-20' உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற அர்ஷ்தீப் சிங் உள்ளார். இவரை தவிர மற்றவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். ஐ.பி.எல்., தொடரில் மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் பந்துவீசிய இளம் மயங்க் யாதவ், 22 அறிமுகமாகலாம். அடிக்கடி காயம் அடையும் இவர், தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மற்றொரு 'வேகப்புயல்' ஹர்ஷித் ராணா, 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் வாய்ப்பு பெறலாம்.
துவக்கத்தில் அபிஷேக் சர்மாவுடன் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் வரலாம். கடைசி கட்டத்தில் வாணவேடிக்கை காட்ட, ரிங்கு சிங் உள்ளார். ரவிந்திர ஜடேஜா இடத்தை பிடிக்க, ரியான் பராக் முயற்சிக்கலாம்.
யாருக்கு வாய்ப்பு: 'சுழலில்' அசத்த தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். ரவி பிஷ்னோயும் இருப்பதால், 'ஸ்பின்னர்'கள் இடையே வலுவான போட்டி காணப்படுகிறது. 'ரிசர்வ்' கீப்பராக ஜிதேஷ் சர்மா உள்ளார்.
ஷிவம் துபே விலகல்: பயிற்சியின் போது முதுகுப்பகுதி காயமடைந்த இந்திய 'ஆல்-ரவுண்டர்' ஷிவம் துபே 31, வங்கதேசத்துக்கு எதிரான 'டி-20' தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக திலக் வர்மா 21, சேர்க்கப்பட்டுள்ளார்.
வருகிறார் மஹமதுல்லா: வங்கதேச அணிக்கு அனுபவ சாகிப் அல் ஹசன் ஓய்வு பெரும் பலவீனம். 14 மாதங்களுக்கு பின் 'ஆப்-ஸ்பின்னர்' மெஹிதி ஹசன் மிர்சா வாய்ப்பு பெற்றுள்ளார். 'சீனியர்' பேட்டர் மஹமதுல்லா 38, வரவு பலம் சேர்க்கலாம். ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த கேப்டன் ஷான்டோ, இன்னொரு சோதனையை சந்திக்க உள்ளார். பந்துவீச்சில் முஸ்தபிஜுர், டஸ்கின் சவால் கொடுக்கலாம்.
புதிய மைதானம்குவாலியரில் 14 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இங்குள்ள கேப்டன் ரூப் சிங் மைதானத்தில் தான் ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதம் அடித்து சச்சின் (200*, எதிர் தென் ஆப்ரிக்கா, 2010) சாதனை படைத்தார். இதற்கு பின் இன்றைய போட்டி குவாலியரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடக்க உள்ளது. 30,000 பேர் அமர்ந்து போட்டியை காணலாம்.
* முதல் போட்டி என்பதால், ஆடுகளத்தின் தன்மையை கணிப்பது கடினம். பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கலாம்.
* இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை. தெளிவான வானிலை காணப்படும்.
* இரு அணிகளும் 14 'டி-20' போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 13ல் வென்று ஆதக்கம் செலுத்துகிறது. வங்கதேசம் ஒரு போட்டியில் வென்றது.
பலத்த பாதுகாப்பு
வங்கதேசத்தில் வாழும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, குவாலியரில் இன்று 'பந்த்'திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இங்கு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல், மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.