/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சார்ஜாவில் சாதிக்குமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் மோதல்
/
சார்ஜாவில் சாதிக்குமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் மோதல்
சார்ஜாவில் சாதிக்குமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் மோதல்
சார்ஜாவில் சாதிக்குமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் மோதல்
ADDED : அக் 12, 2024 11:30 PM

சார்ஜா: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா மோதுகின்றன. இதில் இந்திய அணி, இமாலய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
ஐ.சி.சி., சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. ஏ, பி என இரு பிரிவாக 10 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது. அடுத்து பாகிஸ்தான், இலங்கையை வென்றது.
'டாப்-ஆர்டர்' கவனம்: இன்று சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் இந்திய அணி 82 ரன் (எதிர், இலங்கை) வித்தியாசத்தில் 'மெகா' வெற்றி பெற்றதால், 'ரன் ரேட்' பிளஸ் ஆக உயர்ந்தது. இன்று ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நமது அணி, பெரிய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. இத்தொடரில், சார்ஜா மைதானத்தில் முதல் முறையாக விளையாட உள்ளது. இங்குள்ள ஆடுகளம் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். இதனை உணர்ந்து ஷபாலி வர்மா, மந்தனா, ஹர்மன்பிரித் உள்ளிட்ட 'டாப் ஆர்டர்' பேட்டர்கள் கவனமாக விளையாட வேண்டும். கடைசி கட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளாசினால் நல்லது. பந்துவீச்சில் அருந்ததி, தீப்தி சர்மா, ரேணுகா, ஸ்ரேயங்கா அசத்தினால், அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்கலாம்.
கேப்டன் காயம்: ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது. இத்தொடரில் தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது. கேப்டன் அலிசா ஹீலி (வலது கால்), 'வேகப்புயல்' தைலா விலாமின்க் (தோள்பகுதி) காயத்தால் அவதிப்படுவது பலவீனம். இன்று இவர்கள் பங்கேற்பது சந்தேகம். ஹீலியை பொறுத்தவரை கேப்டன், கீப்பர், துவக்க பேட்டர் என மூன்று பணிகளிலும் அசத்துபவர். இவரது இடத்தை நிரப்புவது கடினம். இது, இந்திய அணிக்கு சாதகம். துணை கேப்டன் தஹ்லியா மெக்ராத், இன்று கேப்டன் பொறுப்பை ஏற்கலாம்.
யார் ஆதிக்கம்
'டி-20' அரங்கில் இரு அணிகளும் 34 முறை மோதின. ஆஸ்திரேலியா 25, இந்தியா 7ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி 'டை' ஆனது.
* 'டி-20' உலக கோப்பை அரங்கில் 6 முறை மோதின. இதில் ஆஸ்திரேலியா 4, இந்தியா 2ல் வென்றன.
* சார்ஜாவில் 'ஸ்கொயர்' பவுண்டரி அளவு குறைவு என்பதால், பேட்டர்கள் எளிதாக ரன் எடுக்கலாம். ஆடுகளம் துவக்கத்தில் 'வேகங்கள்', போகப் போக 'ஸ்பின்னர்'களுக்கு கைகொடுக்கும்.
மறக்க முடியுமா...
இந்திய ரசிகர்கள், சார்ஜா கிரிக்கெட் மைதானத்தையும் சச்சினையும் மறக்க முடியாது. இங்கு 1998ல் நடந்த முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 'பாலைவன புயலை' கிளப்பினார். 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவிய சூழலில், 131 பந்தில் 143 ரன், 131 பந்தில் 134 ரன் விளாசினார். பின் சூதாட்ட புயல் வீச, சார்ஜாவில் சர்வதேச போட்டி நடப்பது குறைந்தது. ஐ.பி.எல்., (2014, 2020, 2021), பெண்கள் 'டி-20' சாலஞ்ச் போட்டிகள் (2020) மட்டும் நடந்தன. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணி சார்ஜாவில் விளையாட உள்ளது. சச்சினை முன்னுதாரணமாக கொண்டு நமது வீராங்கனைகள் இன்று அசத்த வேண்டும்.