/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜில்லுனு ஜெயிக்குமா இந்தியா: மூன்றாவது 'டி-20' சவால்
/
ஜில்லுனு ஜெயிக்குமா இந்தியா: மூன்றாவது 'டி-20' சவால்
ஜில்லுனு ஜெயிக்குமா இந்தியா: மூன்றாவது 'டி-20' சவால்
ஜில்லுனு ஜெயிக்குமா இந்தியா: மூன்றாவது 'டி-20' சவால்
ADDED : டிச 13, 2025 11:11 PM

தர்மசாலா: தர்மசாலாவில் இன்று நடக்கும் மூன்றாவது 'டி-20' போட்டியில், இந்திய அணி 'குளுகுளு' வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெல்ல, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
மூன்றாவது போட்டி இமயத்தின் பனிபடர்ந்த தவுலதார் மலை தொடரில் அமைந்துள்ள எழில்மிகு தர்மசாலா, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடக்கிறது. இங்கு வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவு என்பதால், ஜில்லுனு குளிர்ந்த சூழல் நிலவும். ஆனால் இந்திய அணியில், 'பார்ம்' இல்லாத இருவரை தக்க வைக்க வேண்டுமா என்ற சூடான விவாதம் எழுந்துள்ளது. கேப்டன் சூர்யகுமார் கடந்த 17 சர்வதேச 'டி-20' போட்டியில் 201 ரன் (சராசரி 14.35, 'ஸ்டிரைக் ரேட்' 126.41) தான் எடுத்துள்ளார். கேப்டன் என்பதால் நீக்க முடியாது. மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கி, 'மிஸ்டர் 360 டிகிரி' வீரராக விளாச வேண்டும்.
சாம்சன் எதிர்பார்ப்பு: துணை கேப்டன் சுப்மன் கில் இடம் தான் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 14 போட்டியில் 263 ரன் (சராசரி 23.90, ஸ்டிரைக் ரேட்' 142.93) மட்டும் எடுத்துள்ளார். சாம்சனை பின்வரிசைக்கு அனுப்பிவிட்டு, துவக்க வீரர் வாய்ப்பை சுப்மனுக்கு கொடுத்தனர். தற்போது இவர் சோபிக்காத நிலையில், மீண்டும் துவக்க வீரர் வாய்ப்பை சாம்சனுக்கு வழங்கலாம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2 சதம் அடித்திருப்பது சாம்சனுக்கு சாதகம். அபிஷேக் சர்மா அவசரப்படக்கூடாது. கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல 'பார்மில்' இருப்பது பலம். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே கைகொடுக்க வேண்டும்.
குல்தீப் வாய்ப்பு: வேகப்பந்துவீச்சில் பும்ரா தடுமாறுகிறார். கடந்த போட்டியில் இவரது ஒரே ஓவரில் டோனவன் பெரேரா 2 சிக்சர் விளாசினார். இன்று சுதாரிக்க வேண்டும். ரன்னை வாரி வழங்கும் அர்ஷ்தீப் சிங்கை நீக்கிவிட்டு, 2வது வேகப்பந்துவீச்சாளராக பாண்ட்யாவை பயன்படுத்தலாம். தென் ஆப்ரிக்காவுக்கு தொல்லை கொடுக்கும் 'சுழல் மாயாவி' குல்தீப் யாதவை சேர்க்கலாம். ஆனால் 'ஆல்-ரவுண்டர்களுக்கு' முக்கியத்துவம் அளிக்கும் பயிற்சியாளர் காம்பிர், இரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னரை (வருண் சக்ரவர்த்தி, குல்தீப்) சேர்க்க விரும்ப மாட்டார்.
குயின்டன் பலம்: தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம், பிரவிஸ், பெரேரா, மில்லர், 'ஆல்-ரவுண்டர்' யான்சென் என அதிரடி பேட்டர்கள் உள்ளனர். குயின்டன் டி காக் முன்பு போல விளாசுவது கூடுதல் பலம். தர்மசாலா ஆடுகளத்தில் பந்துகள் 'பவுன்ஸ்' ஆகும். இது நோர்க்கியா, யான்சென், நிகிடி, பார்ட்மென், சிபாம்லா போன்ற 'வேகங்களுக்கு' சாதகம். 'சுழலில்' கைகொடுக்க மஹாராஜ் உள்ளார்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 33 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 19, தென் ஆப்ரிக்கா 13ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* தர்மசாலாவில் ஏற்கனவே மோதிய ஒரே ஒரு 'டி-20' போட்டியில் (2015), இந்திய அணி(199/5), தென் ஆப்ரிக்காவிடம் (200/3) 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
* ஆடுகளம் பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் கைகொடுக்கும். பந்துகள் ஸ்விங், பவுன்ஸ் ஆவது வேகங்களுக்கு சாதகம். இரவில் பனிப்பொழிவு பவுலர்களுக்கு தொல்லை கொடுக்கும்.
* குளிர்ந்த வானிலை காணப்படும். மேகமூட்டமாக இருக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

