/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணியில் மாற்றம் வருமா: புனே டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு
/
இந்திய அணியில் மாற்றம் வருமா: புனே டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு
இந்திய அணியில் மாற்றம் வருமா: புனே டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு
இந்திய அணியில் மாற்றம் வருமா: புனே டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு
ADDED : அக் 21, 2024 11:20 PM

புனே: புனே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பெரியளவில் மாற்றம் செய்யப்படலாம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டி, அக். 24ல் புனேயில் துவங்குகிறது.
ராகுலுக்கு 'நோ':பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்னுக்கு சுருண்டது. இதனால் பேட்டிங்கை பலப்படுத்த வேண்டியுள்ளது. கழுத்து பகுதி காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில், அணிக்கு திரும்புவது நல்ல விஷயம். 150 ரன் விளாசிய சர்பராஸ் கான் நீடிப்பார். முதல் டெஸ்டில் சோபிக்காத ராகுல் (0, 12), நீக்கப்படலாம். முழங்கால் காயத்தால் அவதிப்படும் கீப்பர், பேட்டர் ரிஷாப் பன்ட் இடம் பெறுவது சந்தேகம். இவரது இடத்தை பிடிக்க ராகுல், துருவ் ஜுரல் போட்டியிடலாம். 'ஸ்பெஷலிஸ்ட் கீப்பர்' என்ற அடிப்படையில் துருவ் வாய்ப்பு பெறலாம்.
ஆடுகளம் எப்படி: பெங்களூரு ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, நியூசிலாந்து பவுலர்கள் அசத்தினர். இதை உணர்ந்து புனேயில் 'சுழலுக்கு' சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. புற்கள் சுத்தமாக இருக்காது. மூனறு 'ஸ்பின்னர்'கள் களமிறக்கப்படலாம். ஏற்கனவே அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப், அக்சர் படேல் உள்ளனர். கூடுதலாக வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளதால், 'சுழல்' கூட்டணியில் மாற்றம் ஏற்படும். 'ஆல்-ரவுண்டரான' வாஷிங்டன், பேட்டிங்கிலும் கைகொடுப்பது கூடுதல் பலம்.
சிக்கலில் சிராஜ்: இந்திய மண்ணில் சிராஜ் 'வேகம்' எடுபடவில்லை. 30 டெஸ்டில் 80 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் 61 விக்கெட் (17 போட்டி) அன்னிய மண்ணில் வீழ்த்தியுள்ளார். உள்ளூரில் 19 விக்கெட் (13 போட்டி) தான் கைப்பற்றியுள்ளார். பெங்களூரு டெஸ்டில் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இவருக்கு பதில் ஆகாஷ் தீப் சேர்க்கப்படலாம்.
அஷ்வினுக்கு காயமா
பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அனுபவ 'ஸ்பின்னர்' அஷ்வினுக்கு 2 ஓவர் மட்டும் வழங்கியது சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,''புதிதாக வாஷிங்டன் சுந்தரை சேர்த்துள்ளனர். இதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது... அஷ்வினுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா, அவர் முழுஉடற்தகுதியுடன் இல்லையா, அதனால் தான் பெங்களூரு டெஸ்டில் இரண்டு ஓவர் வழங்கப்பட்டதா, கடைசி நேரத்தில் இவரை பந்துவீச அழைத்தது ஏன், இவருக்கு பதிலாக தான் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளாரா என பல கேள்விகள் எழுகின்றன,''என்றார்.