/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'என்னை அனுப்பிய கடவுள்' * ஷைபாலி உற்சாகம்
/
'என்னை அனுப்பிய கடவுள்' * ஷைபாலி உற்சாகம்
ADDED : நவ 03, 2025 11:15 PM

நவி மும்பை: நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் அரையிறுதி, பைனலில் மட்டும் பங்கேற்ற ஷைபாலி, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஹரியானாவை சேர்ந்தவர் ஷைபாலி வர்மா 21. பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைத்த விளாசல் வீராங்கனை. 15 வயதில் இந்திய அணிக்காக 'டி-20'ல் அறிமுகம் ஆனார். பேட்டிங் 'பார்ம்' சரிய, உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டார். 6 பேர் கொண்ட மாற்று வீராங்கனைகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை.
வேறு வழியில்லாத நிலையில் உள்ளூரில் நடக்கும் 'சீனியர்' தொடரில் ('டி-20') விளையாடினார் ஷைபாலி.
இதனிடையே பிரதிகா காலில் காயம் அடைய, வேறு வழியில்லாத நிலையில் ஆஸ்திரேலியாவுக்கான அரையிறுதியில் சேர்க்கப்பட்டார். அடுத்து நடந்த பைனலில் 87 ரன் எடுத்தார். ஆறாவது பவுலராக அசத்திய இவர், 2 விக்கெட் சாய்த்து, இந்தியா முதல் கோப்பை வெல்ல உதவியாக இருந்தார்.
அவர் கூறுகையில்,'' எந்த ஒரு விளையாட்டு நட்சத்திரமும் காயமடைய வேண்டும் என யாரும் விரும்ப மாட்டர். பிரதிகாவுக்கு ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால், இந்திய அணிக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என கடவுள் தான் என்னை அனுப்பியுள்ளார்,'' என்றார்.
இளம் ஆட்ட நாயகி
உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனையானார் (21 ஆண்டு, 278 நாள்) இந்தியாவின் ஷைபாலி வர்மா. இதற்கு முன், 2013ல் நடந்த பைனலில் (எதிர்: வெ.இ.,) ஆஸ்திரேலியாவின் ஜெஸ் டபின் (23 ஆண்டு, 235 நாள்) இச்சாதனை படைத்திருந்தார்.

