sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

வருங்காலம் வசந்த காலம்... * 'உலகை' வென்ற உற்சாகத்தில் இந்தியா * பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம்

/

வருங்காலம் வசந்த காலம்... * 'உலகை' வென்ற உற்சாகத்தில் இந்தியா * பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம்

வருங்காலம் வசந்த காலம்... * 'உலகை' வென்ற உற்சாகத்தில் இந்தியா * பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம்

வருங்காலம் வசந்த காலம்... * 'உலகை' வென்ற உற்சாகத்தில் இந்தியா * பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம்


ADDED : நவ 03, 2025 11:19 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவி மும்பை: ''தடைகளை தகர்த்து உலக கோப்பை வென்றிருக்கிறோம். இது துவக்கம் தான். எங்களது வெற்றிநடை தொடரும்,''என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்தார்.

நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் (50 ஓவர்) இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடைசி தருணத்தில் தீப்தி சர்மா ஓவரில் தென் ஆப்ரிக்காவின் டி கிளர்க் அடித்த பந்தை ஹர்மன்பிரீத் கவுர் 'கேட்ச்' பிடித்ததும் மைதானத்தில் பறவை போல பறந்து ஆர்ப்பரித்தார். இந்த 'கேட்ச்' இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கியது.

சிறப்பான திட்டம்

இத்தொடர் முழுவதும் கேப்டனாக பிரகாசித்தார் ஹர்மன்பிரீத். இவர் தொட்டதெல்லாம் பொன்னானது. பைனலில் 'பார்ட் டைம்' பவுலரான ஷைபாலி வர்மாவை பந்துவீச அழைத்தார். இதற்கு முன் ஒருநாள் போட்டி வரலாற்றில் 14 ஓவர் தான் வீசி இருந்தார். 'சுழலில்' அசத்திய ஷைபாலி, இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். கேப்டன் என்பவர் திட்டமிடுவதில் கில்லாடியாக இருக்க வேண்டும். உதாரணமாக 1983, உலக கோப்பை பைனலில் கேப்டன் கபில்தேவ் திடீரென மதன் லாலுக்கு கூடுதலாக ஒரு ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் 'ஆபத்தான' விவியன் ரிச்சர்ட்சை (வெ.இ.,) வெளியேற்றி இந்தியாவின் கோப்பை கனவுக்கு வித்திட்டார் மதன் லால். இது போல ஷைபாலியும் முக்கிய கட்டத்தில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய வெற்றிக்கு கைகொடுத்தார்.

ஒற்றுமை முக்கியம்

பஞ்சாப்பை சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர், சக வீராங்கனைகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமான அணியை உருவாக்கினார். ஜெமிமா மட்டுமே மெட்ரோ நகரான மும்பையை சேர்ந்தவர். துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா (சங்லி, மகாராஷ்டிரா), ரிச்சா கோஷ் (சிலிகுரி, மேற்குவங்கம்), தீப்தி சர்மா (ஆக்ரா), ஸ்ரீ சரணி (எராமல்லே, ஆந்திரா), ரேணுகா தாகூர் (ரோஹ்ரு, இமாச்சல்) போன்றவர்கள் நாட்டின் சிறிய ஊர்களில் இருந்து வந்தவர்கள். இவர்களை ஒன்றிணைந்து செயல்பட வைத்தார். இந்திய அணியின் வருங்காலம் சிறப்பானது என்பதை உணர்த்தியுள்ளார். இந்திய பெண்கள் அணியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த முன்னாள் வீராங்கனைகள் ஜுலான் கோஸ்வாமி, அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜிடம் உலக கோப்பையை கொடுத்து, உரிய அங்கீகாரம் அளித்தார்.

அடுத்த திட்டம்

ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில்,''இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் தோற்ற போது மனம் உடைந்து போனோம். அப்போது பயிற்சியாளர் மஜும்தார்,'நீங்கள் செய்த தவறையே மீண்டும், மீண்டும் செய்யக் கூடாது. வெற்றிக்கான எல்லையை தொட வேண்டும்' என்றார். இந்த வார்த்தைகள் எங்களது காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தன. போட்டியில் தவறு செயயக் கூடாது என்ற மனஉறுதியுடன் களமிறங்கினோம். எல்லாம் சாதகமாக மாறின.

பைனலில் ஷைபாலி வர்மா சிறப்பாக பேட் செய்தார். அது, அவருடைய நாள் என உணர்ந்தேன். லாரா-சூனே லுாயிஸ் அச்சுறுத்தி கொண்டிருந்தனர். அப்போது ஷைபாலிக்கு ஒரு ஓவர் கொடுக்கலாமே என உள்ளுணர்வு சொன்னது. லுாயிஸ் விக்கெட்டை வீழ்த்திய ஷைபாலி திருப்புமுனை ஏற்படுத்தினார். இதற்காக அவருக்கு ஒரு சல்யூட்.

பெரிய தொடரில் சாதித்தால் தான், இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் மாற்றம் நிகழும் என நம்பினோம். நாங்கள் எதிர்பார்த்த அந்த நாள் மலர்ந்தது. தடைகளை தகர்த்து உலக கோப்பை வென்று விட்டோம். இந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நமது அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். இது துவக்கம் தான். வெற்றிநடையை தொடர்வது தான் எங்களது அடுத்த திட்டம்,'' என்றார்.



மூவர்ணக் கொடி உயரே பறக்கும்

உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகள் இணைந்து 'எங்கள் மூவர்ணக் கொடி உயரே பறக்கும், நாம் ஒன்றாக எழுவோம், நாம் ஒன்றாக செயல்படுவோம், ஒன்றாக வெல்வோம், வீ ஆர் டீம் இந்தியா,' என வெற்றி கீதம் பாடினர்.

'கேட்ச்' தந்த கோப்பை

கடந்த 1983 உலக கோப்பை பைனலில் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை, பின்னோக்கி ஓடிச் சென்று கபில்தேவ் 'கேட்ச்' செய்தார். இந்தியா முதல் சாம்பியன் ஆக இது உதவியது.

* 2007 'டி-20' உலக கோப்பையில் மிஸ்பா அடித்த பந்தை ஸ்ரீசாந்த் 'கேட்ச்' செய்தார். இந்தியா முதல் 'டி-20' உலக கோப்பை வென்றது.

* இதுபோல தென் ஆப்ரிக்காவின் லாரா அடித்த பந்தை இரு முறை நழுவவிட்டு, பின் 'கேட்ச்' செய்தார் அமன்ஜோத் கவுர். இந்திய பெண்கள் முதல் உலக கோப்பை வெல்ல, இது உதவியது.



கபில்தேவ் வழியில்...

கடந்த 1983ல் இந்திய ஆண்கள் அணிக்கு கபில்தேவ் முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) பெற்றுத்தந்தார். இதுபோல இந்திய பெண்கள் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் சாதித்தார்.

* கபில்தேவ் (1983), தோனி (2007ல் 'டி-20', 2011), ரோகித் சர்மாவுக்கு (2024ல் 'டி-20') பின், உலக கோப்பை வென்ற 4வது இந்திய கேப்டன் ஆனார் ஹர்மன்பிரீத் கவுர்.



ரூ. 51 கோடி பரிசு

உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரூ. 51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசு வழங்கிய பி.சி.சி.ஐ., இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ. 58 கோடி பரிசு வழங்கியது.

22 விக்கெட்

ஒரு உலக கோப்பை (50 ஓவர்) சீசனில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் 2வது இடத்தை நியூசிலாந்தின் ஜாக்கி லார்டு (1982) உடன் பகிர்ந்து கொண்டார் இந்தியாவின் தீப்தி சர்மா (2025). இருவரும் தலா 22 விக்கெட் கைப்பற்றினர். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் லின் புல்ஸ்டன் (23 விக்கெட், 1982) உள்ளார்.



யுவராஜ் வழியில்

கடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடரில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய இந்திய வீரர் யுவராஜ் சிங் (362 ரன், 15 விக்கெட்) தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதுபோல, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா (215 ரன், 22 விக்கெட்) தொடர் நாயகி விருதை கைப்பற்றினார்.

* ஒரு உலக கோப்பை சீசனில், 200+ ரன், 20+ விக்கெட் என, 'ஆல்-ரவுண்டராக' அசத்திய முதல் வீராங்கனையானார் தீப்தி.



இரண்டாவது வீராங்கனை

உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 2வது வீராங்கனையானார் தீப்தி. ஏற்கனவே 2017ல் நடந்த பைனலில் (எதிர்: இந்தியா) இங்கிலாந்தின் அன்யா ஷ்ரப்சோப், 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.






      Dinamalar
      Follow us