/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திரிஷா சாதனை சதம் * இளம் இந்தியா வெற்றி
/
திரிஷா சாதனை சதம் * இளம் இந்தியா வெற்றி
ADDED : ஜன 28, 2025 11:23 PM

கோலாலம்பூர்: மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. நேற்று, கோலாலம்பூரில் நடந்த 'சூப்பர்-6' ('குரூப்-1') போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஸ்காட்லாந்து மோதின. 'டாஸ்' வென்ற ஸ்காட்லாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இந்திய அணிக்கு கொங்காடி திரிஷா, கமலினி ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவரில் 147 ரன் சேர்த்த போது, அரைசதம் அடித்த கமலினி (51) அவுட்டானார். மறுபக்கம் திரிஷா, 53வது பந்தில் சதம் அடித்தார். சர்வதேச அரங்கில் இவர் அடித்த முதல் சதம் இது.
இந்திய அணி 20 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 208 ரன் குவித்தது. திரிஷா (110 ரன், 59 பந்து, 4X6, 13X4), சனிகா (29) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கைத் துரத்திய ஸ்காட்லாந்து அணிக்கு கெல்லி (12), எம்மா (12) ஜோடி ஆறுதல் துவக்கம் தந்தது. பின் வந்த பிப்பா (11), நேமா (10) ஆறுதல் தந்தனர். 14 ஓவரில் 58 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 150 ரன் வித்தியாத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆயுஷி 4, திரிஷா 3, வைஷ்ணவி 3 விக்கெட் சாய்த்தனர்.
110 ரன்
பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை, 19 வயதுக்குட்பட்ட தொடரில் முதல் சதம் அடித்த வீராங்கனை என சாதனை படைத்தார் இந்தியாவின் திரிஷா (110 ரன்). முன்னதாக 2023ல் இங்கிலாந்தின் கிரேஸ், 93 ரன் (எதிர்-அயர்லாந்து) எடுத்ததே அதிகம்.
இரண்டாவது இடம்
இந்திய யூத் அணி நேற்று 208/1 ரன் குவித்தது. பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை (19 வயது) அரங்கில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் இது. முன்னதாக 2023 தொடரில் இந்தியா 219/3 ரன் (எதிர்-எமிரேட்ஸ்) எடுத்தது முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்துடன் மோதல்
கோலாலம்பூரில் ஜன. 31ல் நடக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளன.

