ADDED : ஜூலை 22, 2026 09:57 PM

கொழும்பு: இரண்டாவது இன்னிங்சில் லக்சயா சதம் விளாச, இந்திய அணி 471 ரன் முன்னிலை பெற்றது.
இலங்கை சென்றுள்ள இளம் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் (19 வயது) பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 411, இலங்கை 148 ரன் எடுத்தன.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சாகர் விர்க் (17), ஆர்யன் சக்பால் (6) ஏமாற்றினர். கேப்டன் யாஷ்பர்தன் சவுகான் (20) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய துவக்க வீரர் லக்சயா ராய்சந்தனி 116 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் அசத்திய மனால் சவுகான் அரைசதம் கடந்தார்.
இந்திய அணி 2வது இன்னிங்சில் 208/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. லக்சயா (100), மனால் (51) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின், 472 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாயல இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு செனுஜா (64), கேப்டன் விமத் தின்சாரா (55*) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தனர். ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 155/4 ரன் எடுத்து, 317 ரன் பின்தங்கி இருந்தது. இந்தியா சார்பில் சிகுருபதி வெங்கடா 3 விக்கெட் கைப்பற்றினார்.
