ADDED : ஜூலை 12, 2026 11:32 PM

நியூயார்க்: உருகுவேயில், 1930ல் நடந்த உலக கோப்பை கால்பந்து முதல் சீசனில், 13 அணிகள் பங்கேற்றன. அதன்பின், 1954 முதல் 1978 வரை தலா 16 அணிகள் களமிறங்கின. கடந்த 1982-94ல் தலா 24 அணிகளும், 1998 முதல் 2022 வரை தலா 32 அணிகளும் விளையாடின. தற்போது மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில் நடக்கும் 23வது சீசனில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகிறது.
உலக கோப்பை 24வது சீசன் வரும் 2030ல் மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயினில் நடக்கவுள்ளன. இதில் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்துவது குறித்து, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') பரிசீலித்து வருகிறது. இதனால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
இதுகுறித்து 'பிபா' தலைவர் இன்பான்டினோ கூறுகையில், ''முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை தொடர், மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. ஒவ்வொரு அணியும் சிறப்பாக விளையாடி, கோல் அடித்தன. குறைந்தபட்சம் ஒரு புள்ளி பெற்றன. லீக் சுற்றில் விளையாடிய 10 ஆப்ரிக்க அணிகளில், 9 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறின. கடந்த முறை 5 ஆப்ரிக்க அணிகள் மட்டும் 'நாக்-அவுட்' சுற்றில் பங்கேற்றன. கேப் வெர்டே, குராசோ உள்ளிட்ட எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியவில்லை. வரும் 2030ல் அணிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஒருவேளை 64 அணிகள் களமிறங்கினால், தென் அமெரிக்க நாடுகளில் லீக் போட்டி நடத்தப்படும். இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
