ADDED : ஜூலை 02, 2026 10:46 PM

அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த உலக கோப்பை 'ரவுண்டு-32' போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என, காங்கோவை வீழ்த்தியது. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், 2 கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். இது, உலக கோப்பை அரங்கில் ஹாரி கேன் அடித்த 13வது கோல். இதன்மூலம் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் பிரேசில் ஜாம்பவான் பீலேவை (12 கோல்) முந்தி 6வது இடத்தை பிரான்சின் ஜஸ்ட் பான்டைனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஹாரி கேன். இருவரும் தலா 13 கோல் அடித்துள்ளனர். முதலிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (19 கோல்) உள்ளார்.
* தவிர, அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறார் ஹாரி கேன். அடுத்த இடத்தில் கேரி லினேகர் (10 கோல்) உள்ளார்.
* உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில் அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை ஜெப் ஹர்ஸ்ட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஹாரி கேன். இருவரும் தலா 5 கோல் அடித்துள்ளனர். முதலிடத்தில் கேரி லினேகர் (6 கோல்) உள்ளார்.
* இரண்டு உலக கோப்பை சீசனில், தலா 5 அல்லது 6 கோல் அடித்த 6வது வீரரானார் ஹாரி கேன் (2018ல் 6, 2026ல் 5 கோல்). ஏற்கனவே பெருவின் தியோபிலோ குபிலாஸ், ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ், தாமஸ் முல்லர், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரான்சின் எம்பாப்வே, இப்படி கோல் மழை பொழிந்தனர்.
