/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி
/
ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி
ADDED : ஆக 10, 2025 10:19 PM

யங்கான்: ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) தொடருக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றது.
தாய்லாந்தில் (2026, ஏப். 1-18), பெண்களுக்கான (20 வயது) ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில் 33 அணிகள், 8 பிரிவுகளாக விளையாடுகின்றன. இதற்கான போட்டிகள் பூடான், வியட்நாம், மியான்மர், சீனா உள்ளிட்ட 8 இடங்களில் நடந்தன.
மியான்மரில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் இந்தியா, மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தான் அணிகள் பங்கேற்றன. இந்தோனேஷியாவுக்கு எதிரான முதல் போட்டியை 'டிரா' (0-0) செய்த இந்தியா, துருக்மெனிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் 7-0 என வெற்றி பெற்றது.
இந்திய அணி தனது கடைசி போட்டியில் மியான்மரை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவின் பூஜா ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய மியான்மர் அணி வீராங்கனைகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா' என 7 புள்ளிகளுடன் 'டி' பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, 20 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. கடைசியாக 2006ல் மலேசியாவில் நடந்த 3வது சீசனில் பங்கேற்ற இந்தியா, லீக் சுற்றோடு திரும்பியது.