ADDED : ஜூலை 08, 2026 11:10 PM

உலக கோப்பை கால்பந்து 23வது சீசனில் முதல் முறையாக 48 அணிகள் விளையாடுகின்றன. ஆசியா சார்பில் 9 அணிகள் களமிறங்கின. இதில் தென் கொரியா, கத்தார், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் என, 7 அணிகள் லீக் சுற்றோடு திரும்பின. ஜப்பான், ஆஸ்திரேலிய அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்த போதும், 'ரவுண்டு-32' போட்டியில் தோல்வியடைந்தன.
கொரியா அபாரம்: உலக கோப்பை வரலாற்றில், ஆசியா சார்பில் தென் கொரிய அணி அதிகபட்சமாக 12 முறை பங்கேற்றது. அதன்பின் ஜப்பான் 8, ஈரான், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா தலா 7, வட கொரியா, கத்தார், ஈராக் தலா 2, இந்தோனேஷியா, இஸ்ரேல், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறை உலக கோப்பையில் விளையாடின.
தென் கொரிய அணி, ஒரே ஒரு முறை மட்டும் அரையிறுதி வரை சென்று 4வது இடம் பிடித்திருந்தது. கடந்த 2002ல் சொந்த மண்ணில் நடந்த தொடரில் அரையிறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்த தென் கொரிய அணி, 3வது இடத்துக்கான போட்டியில் துருக்கியிடம் தோல்வியடைந்து, 4வது இடம் பிடித்தது. இது, உலக கோப்பை அரங்கில் ஆசிய அணியின் சிறந்த செயல்பாடாக உள்ளது.
அதன்பின் வட கொரிய அணி ஒரு முறை (1966) காலிறுதி வரை சென்றது. ஜப்பான் அணி 4 முறை 'ரவுண்டு-16', ஒரு முறை 'ரவுண்டு-32' சுற்றில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 2 முறை 'ரவுண்டு-16', ஒரு முறை 'ரவுண்டு-32' போட்டியில் விளையாடியது. சவுதி அரேபிய அணி ஒரு முறை 'ரவுண்டு-16' போட்டியில் பங்கேற்றது.
மூன்று மட்டும்
நடப்பு உலக கோப்பை தொடரில் ஆசிய அணிகள் மொத்தம் 29 போட்டியில் விளையாடின. இதில் 3ல் மட்டுமே வெற்றி (9 'டிரா', 17 தோல்வி) பெற்றன. தென் கொரியா (2-1, எதிர்: செக்குடியரசு), ஆஸ்திரேலியா (3-0, எதிர்: துருக்கி), ஜப்பான் (4-0, எதிர்: துனிசியா) அணிகள் மட்டும் லீக் போட்டியில் வெற்றி பெற்றன.
* ஈரான் அணி 3 லீக் போட்டிகளையும் 'டிரா' செய்தது. ஈராக், ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் 3 போட்டியிலும் தோல்வியை தழுவின.
